ஜல்லிக்கட்டு காளைகளை அருகிலிருந்து பராமரிக்கத் தொடங்கியுள்ள 4 வயது சிறுமி, அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கிறாள்.
மதுரை :
பொங்கல் திருநாளை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. தமிழர்களின் பண்பாட்டு வீர விளையாட்டாகவும் விளங்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாடுபிடி வீரர்களும் காளை வளர்ப்போரும் தயாராகி வருகிறார்கள். ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க காளைகளுக்கு பயிற்சி கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
துரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த வினோத்-இலக்கியா தம்பதி புகழ், தளபதி என இரண்டு காளைகளை வளர்த்து வருகிறார்கள். காளைகளுக்கு பயிற்சி அளிக்கும்போதும் அதற்கு உணவு கொடுக்கும்போதும் 4 வயதான தங்கள் மகள் அபியையும் உடன் வைத்துக்கொண்டே செய்வார்கள். அதனால், அபி காளைகளுடன் விளையாட ஆரம்பித்தாள். சிலும்பும் காளைகள் அருகில் செல்வது, அதற்கு முத்தமிடுவது, கட்டித் தழுவுவது என்று நெருக்கமானவள், தீவனம், பிஸ்கட், பேரீச்சம் பழம் என காலை உணவுகளை இப்போது அவற்றுக்கு வழங்க ஆரம்பித்திருக்கிறாள்.
காளைகளை நடைப்பயிற்சி, மண் குத்தும் பயிற்சி, நீச்சல் பயிற்சிகளுக்கு அழைத்துச் செல்லும்போது தானும் கூடவே செல்கிறாள். ஆக்ரோசம் காட்டும் காளைகள், குழந்தை அபியை பார்த்ததும் அடங்கிவிடுகின்றன. இரண்டு காளைகளும் பல ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று தங்கக் காசு, பீரோ, ஃபிரிட்ஜ் என பல்வேறு பரிசுகளை வாங்கிக் குவித்துள்ளன. தற்போது இவை இரண்டும் குழந்தை அபியுடன் செல்லமாக விளையாடுவதை ஊர் மக்கள் கண்டு வியக்கிறார்கள்.