சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (வியாழக்கிழமை) திறக்கப்படுகிறது.

சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் வரும் வெள்ளிக்கிழமை மகாராஜாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு நாளை சபரிமலை கோவில் திறக்கப்படுகிறது.
தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும். மறுநாள் 13-ந் தேதி சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளையொட்டி, அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். தொடர்ந்து அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளுக்கு பின், இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும். இந்த நாட்களில் சபரிமலை கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

மீண்டும் மண்டல மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், நம்பூதிரி நடையை திறந்து தீபாராதனை காட்டுவார். அன்றைய தினமும் பக்கதர்களுக்கு அனுமதி இல்லை. அடுத்த நாள் மீண்டும் புதிய மேல்சாந்திகள் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார்கள் அதனை காண்பதற்கு பக்கதர்களுக்கு அனுமதி உண்டு. ஆதலால் தொடர்ந்து அதிகாலை முதல் முன்பதிவுகள் நடைபெற்று வருகின்றது.
மேலும் 16-ந் தேதி முதல் 2021 ஜனவரி 19-ந் தேதி வரையிலான அனைத்து தினங்களுக்கான ஆன் லைன் தரிசன முன்பதிவு நிறைவு பெற்றுவிட்டது என தேவஸ்தான தலைமை அலுவலகம் கூறியுள்ளது.




