ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்க தமிழ்நாடு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை வைத்து இருக்கிறார்.

ஆன்லைன் வகுப்புகள் பற்றி கனிமொழி தன் டிவிட்டரில்”ஆன்லைன் வகுப்புகளை கையாள முடியாமல், தொழில்நுட்ப வசதி இல்லாமல், தமிழக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் செய்தி அதிகரித்து வருகிறது. உளுந்தூர்பேட்டையை சேர்ந்த நித்யஶ்ரீ, தேனியை சேர்ந்த விக்கிரபாண்டி ஆகியோர் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் தன் டிவீட்டில் “ஆன்லைன் வகுப்புகள் குறித்து உரியமுறையில் திட்டமிட்டு, வழிகாட்டுதல்களோடு அது செயல்படுத்தப்பட்டு, மாணவர்களின் அழுத்தத்தை நீக்க உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

ஆன்லைன் வகுப்புகள் மாணவர்களுக்கு மன அழுத்தம் கொடுப்பதாக பொதுவான கருத்து நிலவி வருகிறது. தினமும் இவ்வளவு மணி நேரம்தான் வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற விதிமுறைகளையும் மாநில, மத்திய அரசுகள் வகுத்துள்ளன. இதையும் மீறி சில பள்ளிகள் அதிக நேரம் வகுப்புகள் நடத்துவதாக புகார் எழுகின்றன. இதற்கு கடிவாளம் போடுவதற்கு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.




