பெண்ணிடம் செயின் பறிக்க முயன்றபோது பைக் ஆசாமிகளை மடக்கி பிடித்தனர்.
கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். தனியார் கம்பெனி ஊழியர். இவரது மனைவி அமிர்தா. நேற்று மதியம் அமிர்தா, அருகே உள்ள கடைக்கு சென்றார். அங்கு சாலையை கடக்க முயன்றபோது, பைக்கில் வந்த 2 பேர், அவரது கழுத்தில் இருந்த நகையை பறிக்க முயன்றனர். இதை கண்ட அமிர்தா, சுதாரித்து கொண்டு, செயினை பிடித்து கொண்டார். ஆனால் அவர்கள், பைக் வேகமாக இயக்கி, அவரை இழுத்து சென்று, கீழே தள்ளி விட்டு தப்பினர். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தமக்கள், மர்மநபர்களை விரட்டி சென்றனர்.
மேலும், அருகில் இருந்த ஆட்டோ ஸ்டேண்டுக்கு தகவல் கொடுத்து, ஆட்டோக்களை சாலையின் குறுக்கே ஆட்டோவை குறுக்கே நிறுத்தினர். இதை கண் கண்ட மர்மநபர்கள், திரும்பி சென்றனர். உடனே, பொதுமக்கள் அவர்களை விரட்டினர். அதில் ஒருவன், சிறுசேரி சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் நுழைந்தான். மற்றொருவன் கழிவுநீர் கால்வாயில் குதித்தான். ஆனால், அந்த நிறுவன ஊழியர்கள் 2 பேரையும், மடக்கி பிடித்து தர்மஅடி கொடுத்தனர்.
தகவலறிந்து கேளம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, 2 பேரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கோட்டீஸ்வரன், கரண் என தெரிந்தது. இவர்கள், கடந்த மாதம், அதே பகுதியில் நகைபறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.