தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படுவது எப்போது?
அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்தார்.
திரையரங்குகளுக்கு தடை
தமிழகத்தில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்குள் திறப்பதற்கு மட்டும் இன்னும் தடை தொடர்கிறது. இதனால், திரையரங்குகளை விரைந்து திறக்க வேண்டும் என்று திரைப்படத் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவை திரையரங்க உரிமையாளர்கள் இன்று நேரில் சந்தித்தனர். இதையடுத்து, இதுதொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு கூறியதாவது:-
எப்போது திறப்பு?
திரையரங்கு உரிமையாளர்கள் இன்று காலையில் என்னை நேரில் சந்தித்தனர். திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து மத்திய அரசிடம் இருந்து முழுமையான வழிகாட்டு நெறிமுறைகள் வரவில்லை. மத்திய அரசின் வழிகாட்டுதல், மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுறுத்தல்படி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.