ஆன்லைனில் ரம்மி விளையாடி ரூ.10 லட்சம் வரை பணத்தை இழந்து பெரும் கடனாளியாக மாறிய பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆன்லைன் விளையாட்டுகள் குறித்த கவலையை அதிகப்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருபவர் ஆனந்தன். இவரது சொந்த ஊர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள புருஷோத்தமகுப்பம் பகுதியாகும்.
இளைஞர் ஆனந்தன் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு சமீப காலமாக அடிமையாகி விட்டதாகக் கூறப்படுகிறது. சென்னையில் வேலை பார்க்கும்போதும் எந்த நேரமும் செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இரவு, பகல் என எந்த நேரமும் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாடியதன் மூலம் அவர் முதலில் சிறிதளவு பணம் வென்றுள்ளார். இதனை நம்பி மேலும் அதிக பணம் கிடைக்கும் என வெறிகொண்டு விளையாடியுள்ளார். பணத்தை இழக்கும் போதும் தன்னால் இதனை விட அதிக பணத்தை வென்றிட முடியும் என அவர் தனது விளையாட்டினைத் தொடர்ந்துள்ளார்.
தன்னால் அதிக பணம் வெல்ல முடியும் என்ற பேராசையில் தனது வங்கி கணக்கில் இருந்து சுமார் 10 லட்சத்தை ஆன்லைன் ரம்மி மூலம் இழந்துள்ளார். மேலும், 6 லட்சம் ரூபாய் வரை வெளியில் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மியில் விளையாடியுள்ளார். இந்த கடன் தொடர்பான விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து மகனை கடுமையாக கண்டித்துள்ளனர்.
இதனால், என்ன செய்வதென்று தெரியாத ஆனந்தன் செல்போனை உடைத்துவிட்டு, வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஆனந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இளைஞரின் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்கு படித்த இளைஞர்களும் எளிய வழியில் பணம் பார்க்கலாம் என்ற நோக்கத்தில் தவறான பாதைக்கு சென்று பணத்தையும் இழந்து தங்களது உயிரையும் மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.