தமிழகத்தில் கொரொனா பரவல் அதிகரிப்பின் காரணமாக, தற்போதைக்கு திரையரங்குகள் திறக்கும் சூழல் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவிவந்ததன் காரணமாக கடந்த மார்ச் 16 முதல் திரையரங்குகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் படி சுமார் 900 க்கும் மேற்பட்ட திரையரங்குகள் அனைத்தும் தற்போது வரை மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் பாதுகாப்பு விதிமுறைகளோடு தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பிறகு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க முடிவு எடுத்துள்ளதாக அனைத்து திரையரங்கு உரிமையாளர் சங்கத்தில் தகவல் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, விரைவில் திரையரங்குகளில் நல்ல திரைப்படங்களை காண முடியும் என்ற நினைப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றும் அளிக்கும் வகையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று தெரிவித்துள்ளார். கோவில்பட்டி அருகே கயத்தாரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவதை பொறுத்து தான் திரையரங்குகளை திறப்பது பற்றி முதல்வர் முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார். இதோடு தற்போது உள்ள சூழலில் திரையரங்குகளை திறக்கும் வாய்ப்பு இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும் வெளிநாடுகளைப் போன்று இடைவெளி விட்டு படம் பார்த்தால், உரிமையாளருக்கு லாபம் கிடைக்காது என்று தெரிவித்துள்ளார்.