ஆடைக்கு மேல் தொட்டால் அது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாகாது என்று மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் அமர்வு அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிறு குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் சீண்டல்கள் வயது வித்தியாசம் பார்ப்பது இல்லை. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த சதீஷ் ரெக்டே என்பவர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிறுமியைக் கொய்யாப்பழம் தருவதாகக் கூறி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்தார்.
சிறுமியின் மார்பகத்தைத் தொட்டு, அவரது ஆடையை அவிழ்க்க முயலும்போது சிறுமி பயத்தில் அழ ஆரம்பிக்கவே அவரை தன் வீட்டுக்குள்ளேயே வைத்துப் பூட்டி விட்டு ஓடி சென்றுவிட்டார்.
2016ஆம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் குறித்து சதீஷ் ரெக்டே மீது சிறுமியின் பெற்றோர் நாக்பூர் காவல்துறையில் புகார் கொடுத்தனர். இந்தப் புகாரின் பேரில் பாலியல் தொல்லை அளித்த சதீஷ் ரெக்டே மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நாக்பூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் போக்சோ சட்டத்தை உறுதி செய்து குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து சதீஷ் ரெக்டே மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் அமர்வில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த பெண் நீதிபதி புஷ்பா கனேடிவாலா, போக்சோ சட்டத்தில் பாலியல் நோக்கத்துடன் ஒருவரைத் தோலுடன் தோல் உரசினால் மட்டுமே அது பாலியல் வன்முறை என கருத்தில் கொள்ளப்படும். பாலியல் நோக்கத்துடன் விருப்பமில்லாத ஒருவரை வெறுமனே ஆடைக்கு மேல் தொட்டு தொந்தரவு கொடுத்தால் அது பாலியல் வன்முறைக்குக் கீழ் வராது என்று தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பு அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் பெண் நீதிபதியின் இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பேசு பொருளானது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். ஒவ்வொரு ஆண்டும் போக்சோ சட்டத்தின் கீழ் 43 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்படும் நிலையில் உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்திருந்தார்.
உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அட்டர்னி ஜெனரல் முறையீடு செய்வது உச்ச நீதிமன்ற வரலாற்றில் இது இரண்டாவது முறையாகும்.
இந்த முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம் மும்பை உயர்நீதிமன்றம் வழங்கிய சர்ச்சையான தீர்ப்பைக் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி நிறுத்தி வைத்தது.
இந்த வழக்கில் இன்று (நவம்பர் 17) தீர்ப்பு வழங்கிய நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான அமர்வு, மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. மேலும் குற்றவாளியைச் சட்டத்தின் ஓட்டைகளிலிருந்து தப்பிக்க அனுமதிக்கக் கூடாது என்பதே சட்டத்தின் நோக்கம். ஆடைக்கு மேலோ அல்லது உடலினை உரசியோ எப்படியாக இருந்தாலும் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தல் என்ற நோக்கத்தில் தொட்டாலே அது குற்றம் தான் என்று கருத்து தெரிவித்துள்ளது.
மேலும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றவாளிக்கு மூன்று ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது. இது பரவலாக வரவேற்பை பெற்றுள்ளது.