சென்னையில் இருந்து 70 பேருடன் தூத்துக்குடிக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு அவசரமாக ஓடுபாதையில் நிறுத்தப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடி செல்லும் ஸ்பைஸ்ஜெட் தனியார் விமானம் காலை 10.10 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 65 பயணிகள், 5 விமான ஊழியர்கள் உட்பட 70 பேர் இருந்தனர். இந்த விமானம் நடைமேடையில் இருந்து ஓடுபாதைக்கு நோக்கி வந்த போது விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார். இந்த நிலையில் விமானத்தை வானில் பறக்க செய்தால் பெரும் ஆபத்து என்பதை உணர்ந்து, உடனடியாக விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்திவிட்டு விமான கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்தார். பின்னர் இழுவை வண்டி மூலம், விமானம் மீண்டும் நடைமேடைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.

விமானப் பொறியாளர்கள் குழுவினர், விமானத்துக்குள் ஏறி விமானத்தை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். பயணிகள் விமானத்துக்கு உள்ளேயே அமர வைக்கப்பட்டனர். விமானம் பழுதுபார்க்கப்பட்டு, தாமதமாக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி, தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து, விமானம் வானில் பறக்க தொடங்குவதற்கு முன்னதாகவே, எடுத்த உடனடி நடவடிக்கை காரணமாக, 70 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




