கடன் மோசடி வழக்கில், யூனியன் வங்கி அதிகாரிக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வங்கி மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளையில் 2006-2007 ம் ஆண்டில், நேஷனல் மெடிசின் என்ற தனியார் நிறுவனத்திற்கு கடன் வழங்கியதன் மூலம் வங்கிக்கு 6.19 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வங்கி அதிகாரி கண்ணன், மஞ்சுளா, நரேஷ்குமார், பார்வதி ராமகிருஷ்ணன், நேஷனல் மெடிசின் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் உரிமையாளர் அனுராக் ஜெயின் ஆகியோர் மீது சிபிஐ கடந்த 2009 ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை 11 வது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜவஹர், அண்ணாசாலை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிளையின் மேலாளர் கண்ணனுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2 லட்ச ரூபாயும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், நேஷனல் மெடிசின் நிறுவனத்தின் உரிமையாளர் அனுராக் ஜெயினுக்கு 10ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 4 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அவரின் நிறுவனத்திற்கு 2 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மஞ்சுளா என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுள்ளது.
பார்வதி ராமகிருஷ்ணன் என்பவருக்கு, ஒரு லட்சம் அபராதமும், 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.