ரசிகர்கள் இல்லாத காரணத்தால் தங்கள் அணியின் தீவிரம் குறையாது என்று ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த சீசனில் ரசிகர்கள் இல்லாத காலி மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன. கொரோனா பாதிப்பை எதிர்த்து போராடியவர்களை பெருமைப்படுத்தும் வகையில் அந்த அணி தங்களது புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இல்லாமல் இந்த முறை யூஏஇயில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளன. 53 நாட்கள் நடைபெறவுள்ள இந்த தொடர், முதல் போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே இடையில் நாளை அபுதாபியில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஆர்சிபி அணி, கொரோனா பாதிப்பை எதிர்த்துப் போராடியவர்களை கௌரவப்படுத்தும் வகையில் சிலரை தேர்ந்தெடுத்து அவர்களை பாராட்டியுள்ளது. மேலும் இந்த சீசனில் பயன்படுத்தவுள்ள புதிய ஜெர்சியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த ஜெர்சியில் “மை கோவிட் ஹீரோஸ்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் விராட் கோலி, பார்த்திவ் படேல், தேவ்தத் படிக்கல் உள்ளிட்ட ஆர்சிபி வீரர்கள் பங்கேற்றனர். ஆர்சிபி தலைவர் சஞ்சீவ் சூரிவாலாவும் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலி, ரசிகர்கள் இல்லாத காலி மைதானங்களில் விளையாடுவதால் ஆர்சிபியின் தீவிரம் எந்த வகையிலும் குறையாது என்று தெரிவித்துள்ளார்.

காலி மைதானங்களில் விளையாடுவது வித்தியாசமானதுதான் என்பதை மறுக்க முடியாது என்று தெரிவித்துள்ள விராட், ஆயினும் இந்த போட்டிகளில் விளையாடுவதன் மூலம் பலருக்கு அவர்களின் சந்தோஷத்தை மீண்டும் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்றார். தற்போது பயோ பபள் முறைக்கு ஆர்சிபி வீரர்கள் பழகிவிட்டதாகவும் விராட் தெரிவித்தார்.
ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கிடையில் வரும் செப்டம்பர் 21ம் தேதி முதல் போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.




