ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் இன்று பரபரப்பாக நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி குஜராத் அணியை வீழ்த்தி குவாலிபயர் ஆட்டத்திற்கு முன்னேறியது.
18வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் அணி முதலிடத்தையும், பெங்களூரு அணி இரண்டாம் இடத்தையும், குஜராத் அணி மூன்றாம் இடத்தையும், மும்பை அணி நான்காம் இடத்தையும் பிடித்தன. இந்த நான்கு அணிகளுக்கிடையேயான பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின. நேற்று நடைபெற்ற முதல் பிளே ஆஃப் ஆட்டத்தில் முதலிரண்டு இடங்களைப் பிடித்த பஞ்சாம் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய பெங்களூரு அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் இன்று முதல் எலிமினேட்டர் ஆட்டம் நடைபெற்றது. சண்டிகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் புள்ளிப் பட்டியலில் மூன்றாம் இடம்பிடித்த குஜராத் அணியும், நான்காம் இடம் பிடித்த மும்பை அணியும் மோதின. டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மாவும், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜானி பேர்ஸ்டோவும் களமிறங்கினர். இங்கிலாந்தைச் சேர்ந்த ஜானி பேர்ஸ்டோ மும்பை அணிக்காக களமிறங்குவது இதுவே முதல்முறையாகும். ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக ரோஹித் சர்மா ஜானி பேர்ஸ்டோவிற்கு மும்பை அணியின் தொப்பியை வழங்கி அவரை வரவேற்றார்.
ஆட்டம் தொடங்கியதும் முதல் ஓவரில் இருந்தே இந்த ஜோடி குஜராத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. குறிப்பாக மும்பை அணிக்காக அறிமுகம் ஆன ஜானி பேர்ஸ்டோவின் பேட்டிங்கில் அணல் பறந்தது. குறிப்பாக பிரசித் கிருஷ்ணா வீசிய ஆட்டத்தின் நான்காவது ஓவரில், மூன்று சிக்சர்கள், இரண்டு பவுண்டரிகளுடன் 26 ரன்களைக் குவித்தார். மறுபக்கம் ரோஹித் சர்மா கொடுத்த சுலபமான சில கேட்ச்களையும் குஜராத் அணி வீரர்கள் தவறவிட்டனர். இதனை ரோஹித் சர்மாவும் கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார். பவர் பிளேவான 6 ஓவர்களில் மும்பை அணி விக்கெட் இழபின்றி 79 ரன்களைக் குவித்தது. 7.2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 84 ரன்களாக இருந்த போது தொடக்க ஜோடி பிரிந்தது. அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் மூன்று சிக்சர்கள் நான்கு பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்திருந்த ஜானி பேர்ஸ்டோ தமிழக வீரர் சாய் கிஷோரின் பந்துவீச்சில் ஜெரால்ட் காட்ஸியிடம் கேட்ச் கொடுத்து முதல் விக்கெட்டாக வீழ்ந்தார்.

அதற்குப் பிறகு வந்த சூர்யகுமார் யாதவும் அதிரடி காட்ட 8.4 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 100 ரன்களைத் தொட்டது. அதே நேரம் ரோஹித் சர்மாவும் ஐபிஎல் போட்டிகளில் 7000 ரன்கள் என்ற மைல்கல்லைக் கடந்தார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலிக்குப் பிறகு 7000 ரன்களைக் கடந்த வீரர் ரோஹித் சர்மா மட்டுமே.
அணியின் ஸ்கோர் 13 ஓவர்களில் 143 ரன்களாக இருந்த போது அதிரடியாக ஆடிவந்த சூர்யகுமார் யாதவ், சாய் கிஷோரின் பந்தில் மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவர் 20 பந்துகளில் மூன்று சிக்சர் ஒரு பவுண்டரி என 33 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து அதிரடியாக அரை சதம் கடந்து ஆடி வந்த ரோஹித் சர்மா, 50 பந்துகளில் 4 சிக்சர்கள் 9 பவுண்டரிகளுடன் 81 ரன்கள் எடுத்திருந்த போது, பிரசித் கிருஷ்ணா பந்து வீச்சில் ரஷீத் கானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இறுதிகட்டத்தில் அதிரடி காட்டிய திலக் வர்மா 11 பந்துகளில் 25 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 9 பந்துகளில் 22 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்களைக் குவித்தது.
குஜராத் அணி தரப்பில் சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா தலா இரண்டு விக்கெட்டுகளையும் சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே குவாலிபயர் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியில், கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணிக்கு மும்பை அணி ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தது. முதல் ஓவரிலேயே ட்ரெண்ட் போல்ட் வீசிய பந்தில், கேப்டன் சுப்மன் கில் எல்பிடபில்யூ ஆகி ஒரு ரன்னிலேயே பெவிலியன் திரும்பினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் பொறுப்புணர்ந்து நிதானமாகவும் அதே நேரத்தில் அதிரடியாகவும் விளையாடி எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குசால் மெண்டிஸ் 10 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்த போது ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார். 28 பந்துகளில் அரை சதம் கடந்து அதிரடியாக விளையாடி வந்த சாய் சுதர்சன் குஜராத் அணியினருக்கு பெரும் நம்பிக்கையாகத் திகழ்ந்தார்.
சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்த் மற்றொரு தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரும் நம்பிக்கை அளிக்கும் வகையில் அதிரடியாக விளையாடினார். இவர்கள் இருவரும் ஆடிய விதத்தைப் பார்த்த பொழுது குஜராத் அணி வெற்றி பெற்றுவிடும் என்றே எண்ணத்தோன்றியது. மும்பை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடியைப் பிரிக்க மும்பை அணி படாத பாடுபட்டது. 13.4 ஓவர்களில் குஜராத் அணியின் ஸ்கோர் 151 ரன்களைக் கடந்த போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ராவின் மாயாஜால யார்க்கர் வேகத்தில் வாஷிங்டன் சுந்தர் கிளீன் போல்டாகி வெளியேறினார். அவர் 24 பந்துகளில் மூன்று சிக்சர் ஐந்து பவுண்டரிகளுடன் 48 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து இம்பேக்ட் பிளேயராக ரதர்ஃபோர்டு உள்ளே வந்து சற்று அதிரடி காட்டினார். ஆனாலும் மும்பை அணியின் பந்துவீச்சு சற்று ஓங்கியிருக்கவே குஜராத் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 49 பந்துகளில் 80 ரன்கள் அடித்து குஜராத் ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்து விளையாடி வந்த சாய் சுதர்சன் ரிச்சர்ட் கிளீசன் வீசிய புல்டாஸ் பந்தை ரேம்ப் ஷாட் அடிக்க முயன்று கிளீன் போல்டாகி வெளியேறினார். நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் அடித்த ஆரஞ்ச் கேப் ஹோல்டர் சாய் சுதர்சன் ஆவார்.

அடுத்து 15 பந்துகளில் 24 ரன்கள் அடித்த ரதர்ஃபோர்டு ட்ரெண்ட் போல்ட் வேகத்தில் வீழ ஆட்டம் மும்பை பக்கம் சென்றது.
மற்றொரு தமிழக வீரரான ஷாருக்கானும், திலக் வர்மாவும் குஜராத் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல முயன்றும் ஆட்டம் மும்பை பக்கமே இருந்தது. குஜராத் அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் ஷாருக் கான் மற்றும் திலக் வர்மா ஆகியோர் இருந்தனர். இரண்டு பந்துகள் மீதமிருக்க ஷாருக் கான் தனது விக்கெட்டை இழக்க அந்த ஓவரில் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே குஜராத் அணி வீரர்கள் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று குவாலிபயர் ஆட்டத்திற்கு முன்னேறியது. ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறும் இரண்டாவது குவாலிபயர் ஆட்டத்தில் மும்பை அணி பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்த 10 ஆட்டங்களில் 9 முறை வெற்றியும் ஒரு முறை தோல்வியும் அடைந்துள்ளது. முதலில் பந்து வீசிய 11 ஆட்டங்களில் 5 ஆட்டங்களில் வெற்றியும், 6 ஆட்டங்களில் தோல்வியும் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.