சுரைக்காயில் பல நன்மைகள் உண்டு. நமக்கு எளிதாகக் கிடைக்கக்கூடிய காய்களில், சுரைக்காயும் ஒன்று. விலையும் மலிவு தான்.எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், இந்த சுரைக்காய் கூட்டை சாப்பிட்டு வர மாற்றத்தை நீங்களே காணலாம்.

சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி பெண்களுக்கு உண்டாகும் இரத்த சோகையைப் போக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும், குடல் புண்ணை ஆற்றும், பித்தத்தைக் குறைக்கும். சுரைக்காய் மூலநோயால் அவதி படுபவர்களுக்கு மிகச்சிறந்த மருந்து. இது மலச்சிக்கலைப் போக்கும். இது போல பல நன்மைகளை உள்ளடக்கியது தான் இந்த சுரைக்காய்.
உடல்சூடு தணியவும், சிறுநீர் பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் இது ஒரு நல்ல வழி. இது செய்வதற்கு மிகவும் ஈஸியானது மட்டுமின்றி, நீர்ச்சத்து நிறைந்த காய்கறி என்பதால் ஆரோக்கியமானதும் கூட. இதில் காரம் குறைவாக இருப்பதினால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது சுரைக்காய் கூட்டு எப்படி செய்வது என்று பார்ப்போமா..

தேவையான பொருட்கள்
- சுரைக்காய் – ½ கிலோ
- பாசிப்பருப்பு – ½ கப்
- சின்ன வெங்காயம் – 10
- தக்காளி – 1
- பூண்டு – 10
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
- கொத்தமல்லி – சிறிதளவு
- மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்

அரைக்க தேவையான பொருட்கள்
- தேங்காய் (துருவியது) – ¾ கப்
- மிளகாய் – 2
- சீரகம் – 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
- எண்ணெய் – 1 டீஸ்பூன்
- வரமிளகாய் – 2
- கடுகு – 1 டீஸ்பூன்
- சீர்கம் – ½ டீஸ்பூன்
- பெருங்காயம் – சிறிதளவு
- கறிவேப்பிலை – கையளவு

செய்முறை
- ஒரு பாத்திரத்தில் வெட்டி வைத்துள்ள சுரைக்காய், சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள் தூள், பூண்டு, மற்றும் நன்கு கழுவிய பாசிப்பருப்பு அனைத்தையும் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, 20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
- குக்கரில் சமைத்தால் 3 விசில்கள் விட வேண்டும்.
- அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்தெடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை, வெந்துக் கொண்டிருக்கும் பருப்புடன் சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
- பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்துப் பருப்புடன் சேர்க்கவும்.
- கடைசியாக சிறிது சிறிதாக வெட்டி வைத்துள்ள கொத்தமல்லியை சேர்த்து இறக்கவும்.
அவ்வளவு தான், சுவையான, உடல் எடையை குறைக்கக்கூடிய சுரைக்காய் கூட்டு ரெடி!!!
குறிப்பு
- சுரைக்காய் கூட்டு சாதம், தோசை, சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
- பாசிப்பருப்பிற்கு பதில் துவரம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்தும் சமைக்கலாம்.
- சுரைக்காய்-க்கு பதில் புடலங்காய், கீரை போன்றவற்றையும் இதே முறையில் செய்யலாம்.




