மாறிவரும் வாழ்க்கைச் சூழலில், பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் தற்கொலை எண்ணங்களை உணர்கிறார்கள். உங்களுக்கு தற்கொலை எண்ணங்கள் இருந்தால், நீங்கள் மட்டும் தனியாக இல்லை என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள்.
தற்கொலை எண்ணங்கள் தோன்றுவதால் நீங்கள் கேவலமானவர்கள் அல்ல, அது ஒரு குறைபாடும் அல்ல என்பதையும் நீங்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும், நீங்கள் பைத்தியம் அல்லது பலவீனமானவர் என்றும் அர்த்தமல்ல. நீங்கள் சமாளிக்க முடியாத அளவிற்கு அதிக வலி அல்லது சோகத்தை அனுபவிக்கிறீர்கள் என்பதையே இது குறிக்கிறது.
இந்த நேரத்தில், உங்களுடைய கஷ்டங்கள் ஒருபோதும் முடிவடையாது என்றுகூடத் தோன்றலாம். ஆனால் தக்க உதவியுடன், நீங்கள் தற்கொலை உணர்வுகளை வெல்ல முடியும் என்பதே உண்மை.
தற்கொலை எண்ணங்களை சமாளித்தல்
நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகள் தற்காலிகமானது என்பதை நீங்கள் முதலில் நினைவில் கொள்ளுங்கள், ஆனால் தற்கொலை என்பது நிரந்தரமானது. நீங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் எந்தவொரு சவாலுக்கும் உங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்வது என்பது ஒருபோதும் சரியான தீர்வாக இருக்காது. நீங்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கு உங்களுக்குக் கொஞ்சம் நேரம் கொடுங்கள்.
உங்களுடைய சூழ்நிலைகள் மாறவும், வலிகள் குறையவும் சிறிது காலம் பொறுத்திருங்கள். இதற்கிடையில், உங்களுக்குத் தற்கொலை எண்ணங்கள் இருக்கும்போது கத்திகள் அல்லது ஆபத்தான மருந்துகளை உங்களின் அருகில் வைத்திருக்கக் கூடாது. இந்த மாதிரி நேரங்களில் எங்கும் தனியாக எங்கும் செல்ல முயற்சிக்காதீர்கள்.
ஒருவேளை நீங்கள் மன அழுத்தத்திற்கு மருந்துகளை உட்கொள்பவராயின், முதன்முதலில் மனஅழுத்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளத் தொடங்கும் போது சிலருக்கு அவை இந்தமாதிரித் தற்கொலை எண்ணங்களை ஏற்படுத்தும், ஆனால் உங்கள் மருத்துவரிடம் அதைப்பற்றி கலந்தாய்வு செய்துவிட்டு, உங்கள் மருத்துவர்கள் அந்த மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்த சொன்னால் மட்டுமே நிறுத்துங்கள்.
நீங்கள் ஒருபோதும் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்காமல் மாத்திரைகளை உட்கொள்வதை நிறுத்தவோ அல்லது அளவை மாற்றவோ கூடாது. நீங்கள் திடீரென்று உங்கள் மருந்துகளை உட்கொள்வதை நிறுத்தினால் உங்கள் தற்கொலை உணர்வுகள் இன்னும் மோசமடையும் வாய்ப்புகள் உள்ளது.
மருந்துகள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றைத் தவிர்க்கவும்..
இந்த மாதிரியான சவாலான காலங்களில் நீங்கள் போதைப்பொருள் அல்லது ஆல்கஹால் அருந்துவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது., அவ்வாறு நீங்கள் செய்வது தற்கொலை எண்ணங்களை இன்னும் மோசமாக்கும். நீங்கள் நம்பிக்கையற்றவராக உணரும்போதோ அல்லது தற்கொலை பற்றி நினைக்கும் போதோ இந்த மாதிரிப் பொருட்களை உபயோகிப்பது மிகவும் தவறு. மது உங்கள் பிரச்சனைக்கு ஒருபோதும் தீர்வாகாது.
நம்பிக்கையுடன் இருங்கள்
இப்போதைக்கு உங்கள் நிலைமை மோசமாகத் தோன்றினாலும், நீங்கள் எதிர்கொள்ளும் இந்த சிக்கல்களைக் கையாள்வதற்கான வழிகள் நிறைய உள்ளன என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். பலர் இந்தமாதிரித் தற்கொலை எண்ணங்களை அனுபவித்து, அதிலிருந்து மீண்டு, அதற்குப் பின் தங்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்திருக்கிறார்கள். நீங்கள் எவ்வளவு வலியை அனுபவித்தாலும், அதற்கு தற்கொலை என்பது ஒருபோதும் தீர்வாகாது.
உங்களுக்குப் பிடித்தவர்களிடம் பேசுங்கள்
தற்கொலை உணர்வுகளை நீங்கள் ஒருபோதும் தனியாக நிர்வகிக்க முயற்சிக்கக்காதீர்கள். உங்கள் அன்புக்குரியவர்களிடம் மனதுவிட்டுப் பேசுங்கள். உங்களுக்குத் தேவையான உதவி மற்றும் ஆதரவினைப் பெறுங்கள்.. அவர்களின் அன்பும், ஆறுதல் வார்த்தைகளும் உங்களைத் தற்கொலை எண்ணங்களில் இருந்து மீட்டுக் கொண்டுவர உதவும்.
தற்கொலை உணர்வுகளைச் சமாளிக்க உதவும் ஏராளமான அமைப்புகளும் ஆதரவு குழுக்களும்கூட உள்ளனர்.. உங்களுடைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை நிகழ்வுகளைச் சமாளிக்க தற்கொலை என்பது சரியான வழி அல்ல என்பதை உங்களுக்கு உணர்த்த அவை உங்களுக்கு உதவும்.
தற்கொலை எண்ணத்தைத் தூண்டுவது எது?
எது உங்களுடைய தற்கொலை எண்ணங்களைத் தூண்டுவது என்பதைப் பற்றி உங்கள் நெருங்கிய உறவினரிடமோ அல்லது நண்பர்களிடமோ மனதுவிட்டுப் பேசுங்கள் அல்லது அதற்கான மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். அதன்மூலம் விரைவில் அந்த மாதிரி எண்ணங்களில் இருந்து மீண்டு வந்து உங்களுக்கான வாழ்க்கையை இனிமையாக வாழ வழிபிறக்கட்டும்..