நீங்கள் சாம்பார் சாதம் செய்யும் போது பொதுவாக அரிசி,பருப்பு தனியாக காய்கறிகள் தனியாக என வேகவைத்து எடுத்துவிட்டு, அதற்குப்பின் இரண்டையும் ஒன்றாக சேர்த்துதான் சமைப்பீர்கள் இல்லையா??

ஆனால் அப்படித் தனித்தனியே வைப்பதற்குப் பதிலாக எல்லாவற்றையும் மொத்தமாக குக்கரின் உள்ளே போட்டு மூன்றே விசிலில் எப்படி எளிதாக சாம்பார் சாதம் செய்யலாம்? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
அரிசி -ஒரு டம்ளர் பருப்பு-அரை டம்ளர், தண்ணீர் -ஐந்து டம்ளர்
கடுகு,வெந்தயம்,கருவேப்பிலை -சிறிதளவு
முந்திரிப் பருப்பு-8
நறுக்கிய சிறிய வெங்காயம்-15
பூண்டு- மூன்று துண்டுகள் சாம்பார் தூள்-தேவையான அளவு மிளகாய்த் தூள் -காரத்திற்கேற்ப
காய்கறிகள்- கத்தரிக்காய், முருங்கைக்காய், கேரட், பீன்ஸ்
உப்பு-தேவையான அளவு
செய்முறை
முதலில் சாம்பார் சாதத்திற்கு தோவையான காய்கறிகளான கத்தரிக்காய், முருங்கைக்காய் ,கேரட் , பீன்ஸ் எல்லாக் காய்கறிகளையும் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.. சிறிதளவு புளியை அரைமணி நேரம் ஊறவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்!
குக்கரை அடுப்பில் வைத்து, குக்கர் சூடானதும், எண்ணெய் ஊற்றி அதில் கடுகு மற்றும் நான்கைந்து வெந்தையத்தைப் போட்டுக் கருவேப்பிலை போட்டுத் தாழித்துவிட்டு முந்திரிப் பருப்பை உள்ளெ போட வேண்டும். அதற்குப்பின் முந்திரிப் பருப்பு நிறம் மாறியவுடன், அதில் இரண்டு மூன்றாக நறுக்கி வைத்த சிறிய வெங்காயத்தைப் போட வேண்டும்..
அதற்குப் பின் வெங்காயம் நன்கு வதங்கியவுடன் அதனோடு நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும். அதன்பின் அதனுள் சாம்பார்த் தூளையும், சிறிதளவு மஞ்சள் தூளையும், தேவையான அளவு மிளகாய்த் தூளையும் சேர்த்து நன்கு வதக்கியபின் ஒரு டம்ளர் அரிசி, மற்றும் அரை டம்ளர் பருப்பு சேர்த்துக் கிளறிவிட்டு ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றித் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு, கரைத்து வைத்த புளித்தண்ணீரை ருசிக்கேற்ப சேர்த்துவிட்டு குக்கரை மூடி விசில் போட்டு அடுப்பை சிம்மில் வைத்துவிட்டு, மூன்று விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.. குக்கர் விசில் நின்றவுடன் அதில் சிறிதளவு நெய்யை சேர்த்துக் கிளறிவிட்டு சுடசுட சாப்பிட்டால் அருமையாக இருக்கும்..
அவ்வளவுதான் எளிய முறை சாம்பார் சாதம் ரெடி!! இதனோடு கத்தரிக்காய் வதக்கி சாப்பிட்டால் அருமையாக இருக்கும்!வேலைக்குப் போகும் பெண்களுக்கும், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்களுக்கும் இந்த முறையில் சாம்பார் சாதம் செய்வது மிக எளிதான ஒன்றாக இருக்கும்.




