இப்போதெல்லாம் பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போதுலிருந்தே தனக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கான உடைகளை வாங்க ஆரம்பித்துவிடுகிறார்கள். குழந்தையின் மேலுள்ள அளவு கடந்த பாசத்தினால் அளவுக்கதிகமான உடைகளை வாங்கிக் குவிக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.

அதற்குப் பின் குழந்தை பிறந்தபின்பு குழந்தையைப் பார்க்க வருபவர்களும் நிறைய உடைகளை வாங்கி வருவதால் நிறைய உடைகள் குழந்தைக்குப் பயன்படாமல் போய்விடுகின்றன. குழந்தை பிறந்த முதல் ஒரு வருடத்திற்கு வேகமாக வளருமென்பதால், நாம் அந்தக் காலகட்டத்தில் எந்த உடைகளையுமே தொடர்ச்சியாகப் போட முடியாது. அதனால் பிறந்த குழந்தைக்கு உடைகள் வாங்கும் போது, என்னென்ன விஷயங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதைப் பார்க்கலாம் வாங்க.
உங்கள் குழந்தை பிறப்பதற்கு முன்பே உற்சாகத்தில் அளவுக்கதிகமான உடைகளை உங்கள் குழந்தைக்காக என வாங்காதீர்கள். ஒன்றிரண்டு மட்டும் ஆசைக்காக வாங்கிக் கொண்டாலே போதும். ஏனென்றால் எப்படியும் உங்கள் குழந்தையைப் பார்க்க வரும் உறவினர்களே நிறைய உடைகளைக் கொண்டு வருவார்கள்.அதுவே உங்கள் குழந்தைக்குப் போதுமானதாக இருக்கும்.

குழந்தைக்கு வாங்கும் உடைகளை நம் ஊர் தட்பவெப்பநிலைக்கு ஏற்ற தேர்ந்தெடுக்க வேண்டும். வெயில் காலங்களில் மிருதுவான பருத்தி உடைகளை தேர்ந்தெடுக்கலாம். பருத்தி உடைகள் வியர்வையை உறிஞ்சக்கூடியவை ஆதலால் குழந்தையின் சருமத்திற்கு எரிச்சலூட்டாமல் இருக்கும்.தலை வழியாகப் போடும் உடைகளை வாங்கினால் குழந்தைகளுக்கு போடுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமென்பதால் முன்பக்கம் பொத்தான்கள் மாட்டும்படி இருக்கும் உடைகள் வாங்கினால் நலம்.
உங்கள் குழந்தைக்கு உடைகள் வாங்கும்போது, அவர்கள் இப்போது இருக்கும் அளவைவிட கொஞ்சம் பெரியதாகவே வாங்குங்கள். அப்போதுதான் உங்கள் குழந்தை கொஞ்சம் வளர்ந்தாலும் அந்த உடையை பயன்படுத்தலாம். உங்கள் குழந்தை பிறந்த ஒரு வருடம் வரை வளர்ந்து கொண்டே இருப்பதால், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அவர்களின் உடலின் அளவுகள், அதாவது அவர்களின் உயரம்,எடை இரண்டும் மாறிக்கொண்டேயிருக்கும்.

அதனால் எந்தவொரு உடையையும் மூன்று மாதத்திற்குப் பின் உபயோகிக்க முடியாது. அதற்கேற்ப மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கொஞ்சம் கொஞ்சமாக உடைகளை வாங்குங்கள். மொத்தமாக வாங்கினால் அந்த உடைகள் குழந்தைகள் அடுத்தடுத்து வேகமாக வளரும்போது பயன்படுத்த முடியாமல் போய்விடும்.
ஒருவேளை உங்கள் குழந்தைகளுக்கு வாங்கிய உடைகள் அவர்கள் வேகமாக வளருவதால் பயன்படுத்த முடியாமல் போனால், அதனை வீணாக்காமல் பக்கத்தில் இருக்கும் அனாதை இல்லங்களுக்குக் கூட கொடுக்கலாம்.




