காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானி நிறுவனம் விரிவாக்கம் செய்வதற்கு ஸ்டாலின், வைகோ ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னைக்கு அருகில் உள்ள காட்டுப்பள்ளியில், L&T நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய துறைமுகம் 2012ம் ஆண்டில் இருந்து இயங்கி வந்தது. 2018ம் ஆண்டு இந்தத் துறைமுகத்தின் 97% பங்குகளை, குஜராத் அதானி குழுமம் ரூ.1950 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளது.
330 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சிறிய துறைமுகத்தை 6110 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்வதற்காக, சுற்றுசூழல் துறையின் தடை இன்மைச் சான்று கேட்டு, அதானி குழுமம் விண்ணப்பித்துள்ளது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஏற்பட இருக்கின்ற சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த, சூழல் தாக்க மதிப்பு ஆய்வு அறிக்கையையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.இந்நிலையில், இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தினை, தமிழக அரசு வருகின்ற ஜனவரி 22ம் தேதி நடத்துவதாக அறிவித்து இருக்கின்றது. இத்திட்டத்தின் காரணமாக, சூழலுக்குப் பாதிப்புகள் அதிகமாகவும், மீனவ மக்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் என எதிர்ப்புகள் வலுத்துள்ளன.
இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 1 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரம், 35 லட்சம் மக்களுக்கு வெள்ள அபாயம், பழவேற்காடு ஏரியின் பகுதிகள் அழிந்து போகும் சூழல் எனத் தமிழகத்தில் பொருளாதார – சூழலியல் பாதிப்புகளை உருவாக்கும் அதானி குழுமத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கு அ.தி.மு.க. – பா.ஜ.க. அரசுகள் வரிந்துகட்டி உதவுவது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விரிவாக்கத் திட்டத்திற்கான மக்கள் கருத்துக் கேட்பினை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இதற்கான சுற்றுச்சூழல் அனுமதியையோ, பிற முன்னெடுப்புகளையோ அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. அரசுகள் மேற்கொள்ளக் கூடாது என ஸ்டாலின் வலியுறுத்தினார்.
read more: தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு: அதிமுகவினருக்கு முக்கிய விருதுகள்!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் நரேந்திர மோடியின் நண்பர் அதானி குழுமத்தின் இலாப வெறிக்காக, தமிழ்நாட்டின் இயற்கை வளத்தையும், சுமார் 1,00,000 தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து , 35 லட்சம் தமிழக மக்களை வெள்ள அபாயத்தில் நிறுத்தும், காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை உறுதியுடன் தடுத்து நிறுத்துவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.