கடந்த காலங்களில் பெரியார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திராவிட அரசியல் தலைவர்கள் குறித்தும், பத்திரிகையாளர்கள் குறித்தும் சமூக வலைதளங்களில் தவறாகவும், அவதூறு பரப்பும் வகையிலும் கருத்துகளைப் பதிவிட்டதாக யூடியூபர் கிஷோர் கே.சாமி மீது ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் அடுத்தடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களாக செங்கல்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.

கிஷோர் கே சாமியைத் தொடர்ந்து அவரைப் போலவே சமூக வலைத்தளக்களில் அரசியல் கட்சி தலைவர்கள்,முக்கிய பிரமுகர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வந்த பாஜக பிரமுகர் கல்யாணராமன் கடந்த 17ஆம் தேதி நள்ளிரவில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்ட கல்யாண ராமன், நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடர்ந்ததை அடுத்து குண்டாஸ் ரத்து செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனைப் பற்றி அவதூறாக கருத்து பதிவிட்டதன் அடிப்படையில், அதன் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில், கோபிநாத் கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் பிரிவு காவலர்கள் இரண்டு பிரிவுகளின்கீழ் கல்யாணராமன் மீது வழக்குப்பதிவு செய்து அக்டோபர் 17ம் தேதி இரவு கல்யாணராமனை அவர் வீட்டிலேயே வைத்து கைது செய்தனர்.
இதன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட கல்யாணராமன் தரப்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை ஜார்ஜ் டவுண் நீதிமன்றம் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், கல்யாணராமன் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னதாக உத்தரவிட்டுள்ளார். மேலும் கல்யாணராமனின் ட்விட்டர் பக்கத்தை முடக்கவும் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவு, ட்விட்டர் நிறுவனத்துக்கு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.




