அதிமுக இணைய வேண்டுமென்பதே தற்போது தனது ஒரே நோக்கம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை புரசைவாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமசந்திரன் , சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஐயப்பன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர் செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் மதுரையில் செப். 4 ல் மாநாடு நடைபெற உள்ளது. மதுரை மாநாட்டில் முக்கிய கொள்கை முடிவுகள் எட்டப்பட உள்ளன . அதிமுகவின் தொண்டர்கள் அனைவரும் இணையும் மாநாடாக அது அமையும். எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்தை மக்கள் எப்படி பார்க்கின்றனர் என்பது மக்கள் மனநிலையை பொறுத்தது. அதிமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்குமா அல்லது கூட்டணி அட்சி அமையுமா என்பது குறித்து வாக்குரிமை வைத்துள்ள தமிழக மக்கள் நல்ல முடிவை எடுப்பர்.

அதிமுகதான் எங்கள் உயிர் நாடி இயக்கம். அந்த இயக்கத்தில் சில சட்ட முரண்கள் ஏற்படுத்தப்பட்டடது. அதை தொண்டர்களின் உரிமைக்காகவே உரிமைப் போராட்டம் நடத்தினோம். அதில் தொண்டர்கள் வெற்றி பெறுவர். தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடருகிறேனா என்று கேட்கிறீர்கள், தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம். மதுரை மாநாடு ஒருங்கிணைப்பு மாநாடாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அதிமுகவில் எந்தக் கதவையும் யாரும் எங்களுக்கு சாத்திவிட முடியாது. அது தொண்டர்கள் கையில் உள்ளது. பொதுமக்கள் ஆதரவும் இருந்தால் மட்டும்தான் ஆட்சி அமைக்க முடியும். தொண்டர்கள் வாக்களித்தால் மட்டும் ஆட்சி அமைத்துவிட முடியாது.
கட்சி இணைய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இருப்பதால் தற்போது எடப்பாடி பழனிசாமியை விமர்சிக்கவில்லை. அதிமுக தொண்டர்களும், இந்த ஆட்சியில் தமிழக மக்களும் வேதனையில் உள்ளனர். அதிமுகவில் இணைவதில் எனக்கு பொறுப்புகள் குறித்த எந்த நிபந்தனையும் இல்லை. அதிமுகவுடன் இணையும் சூழல் ஏற்பட்டால் என்னுடன் இருப்பவர்களுக்கு தகுதி அடிப்படையில் உரிய பொறுப்புகளை வாங்கித் தருவேன். மதுரை மாநாட்டுக்கு சசிகலா, தினகரனை உறுதியாக அழைப்போம்.
அதிமுகவை பாஜக விழுங்கப் பார்க்கிறதா என்ற கேள்விக்கு, அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் பல முதலைகள் அதிமுகவை விழுங்கப் பார்த்தது. ஆனால் முடியவில்லை. கட்சி தொடங்கிய பின் விஜய் இன்றுவரை நன்றாகத்தான் செயல்படுகிறார். எதிர்காலத்தில் என்ன நிலையை, ஜனநாயக முறைப்படி எடுப்பார் என்பதைப் பார்த்து அவருக்கு எங்களது தார்மீக ஆதரவு உண்டு. எங்களிடம் விஜய் ஆதரவு கேட்பாரா என்று கேட்கிறீர்கள், எதிர்காலத்தில் நல்லது நடக்கும். எடப்பாடி முழு சங்கியாக மாறிவிட்டதாக துணை முதல்வர் கூறுகிறாரே என்ற கேள்விக்கு, இதற்கு எடப்பாடி பழனிசாமியிடம்தான் கேட்க வேண்டும். எங்களுக்குள் மறுபடி சண்டை மூட்டி விட வேண்டாம் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.



