சி.வி.சண்முகம் சசிகலாவிற்கு எதிராக கருத்து தெரிவித்து வருவதால் அவரை அதிமுக தொண்டர்கள் பாராட்டி வருகின்றனர்.
சென்னை :
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27 ம் தேதி விடுதலை ஆனார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்தநிலையில் கடந்த பிப்ரவரி 8 ம் தேதி அன்று பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா சென்னை திரும்பினார். மேலும், பயண கலைப்பு மற்றும் உடல்நிலை காரணமாக சசிகலா அவரது தி.நகர் வீட்டில் தன்னை தனிமை படுத்திக்கொண்டு ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்தநிலையில் சசிகலா பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் சென்னை திரும்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு டிஜிபி அலுவலகத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் நேரில் சென்று புகார் அளித்தனர். அப்பொழுது மற்ற அமைச்சர்கள் சசிகலாவிற்கு எதிராக பேச பயந்த போது சி.வி. சண்முகம் மட்டுமே செய்தியாளர்களிடம் , அதிமுக உறுப்பினரே இல்லாத ஒருவர் எப்படி அதிமுக கொடியை பயன்படுத்தலாம்? ஊர் பணத்தை கொள்ளையடித்து, சொகுசாக வாழ்ந்து, தண்டனை அனுபவித்து விட்டு வந்துள்ள சசிகலா எப்படி அதிமுக கட்சி கொடியை பயன்படுத்தலாம் என்று கேள்வி எழுப்பினார்.
அதேபோல் நேற்று செய்தியாளர்களுக்கு சி.வி.சண்முகம் பேட்டியளித்த போதும், “அதிமுக கொடியை பயன்படுத்திய சசிகலா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்தநிலையில், முதல்வர் மற்றும் துணை முதல்வரே சசிகலாவிற்கு எதிராக கருத்து தெரிவிக்க பயப்படும் வேளையில் சி.வி.சண்முகம் மட்டுமே சசிகலாவிற்கு எதிராக கருத்து தெரிவித்து ஆண் மகனாக இருக்கிறார் என்று அதிமுக தொண்டர்கள் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.