அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணாவின் நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், திமுக தலைவர் உள்ளிட்டோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணாவின் 52வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி திமுக சார்பில் அமைதி பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த அமைதி பேரணி சென்னை வாலாஜா சாலையில் இருந்து புறப்பட்டு அண்ணா நினைவிடத்தில் நிறைவடைந்தது. பின்னர் மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் திமுக தலைவர் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதேபோன்று அதிமுக சார்பாகவும் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக, தமிழ் மொழி, தமிழ் இனம் என எந்நேரமும் தமிழ்! தமிழ்! என தமிழ் சமூகத்திற்காகவே வாழ்ந்திட்ட பேரறிஞர் அண்ணா அவர்களை அவர்தம் நினைவு தினத்தில், போற்றி வணங்கி மகிழ்கிறேன்” என்று முதல்வர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள டுவிட்டிர் பதிவில், “தமிழை சுவாசித்தவர்;தமிழர்களை நேசித்தவர்;ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் கண்டவர்; கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை உடைமைகளாக்கி வாழ்ந்து வரலாறானவர்! தமிழ்த்தாயின் தவப்புதல்வன் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவு தினத்தில், எனது நினைவஞ்சலியை பணிவோடு சமர்ப்பிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.




