ரஜினி மக்கள் மன்ற போஸ்டர்களில் அர்ஜூனா மூர்த்தி மற்றும் தமிழருவி மணியன் புகைப்படங்கள் இடம்பெறக்கூடாது என்று ரஜினி மக்கள் மன்றம் நி்ர்வாகிகளுக்கும், ரசிகர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ரஜினி மக்கள் மன்றம்
நடிகர் ரஜினிகாந்த் வரும் 31-ந் தேதி கட்சி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட உள்ளார். மேலும், அடுத்தாண்டு ஜனவரியில் புதிய கட்சியையும் தொடங்க உள்ளார். இதுதொடர்பான அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். மேலும், கட்சி பணிகளை கவனிப்பதற்காக தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும், அர்ஜூனா மூர்த்தியை தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் நியமித்துள்ளார்.
ரஜினிகாந்தின் அறிவிப்பைத் தொடர்ந்து அவரது ரசிகர்களும், மன்ற நிர்வாகிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றம் சார்பாக இன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
புகைப்படத்திற்கு தடை
அதில், ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஒட்டப்படும் போஸ்டர்களில் அர்ஜுனா மூர்த்தி, தமிழருவி மணியன், மாநில நிர்வாகி சுதாகர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது. ரஜினி புகைப்படத்துடன் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.