சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்பி ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக வரும் ஜூலை 23 தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என சென்னை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக 2015ஆம் ஆண்டில் சிபிஐ அவர் மீது வழக்குப்பதிவு செய்தது. ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட், மங்கள் டெக் பார்க் லிமிட்டட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி என நான்கு நபர்கள் மற்றும் இரண்டு நிறுவனங்கள் மீது கடந்த 2023 ஆம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக, 5 கோடியே 53 லட்ச ரூபாய் சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் சிபிஐ தகவல் தெரிவித்திருந்தது. தனது வருமான வரி கணக்கு தாக்கல் விபரம் மற்றும் வழக்கின் சில ஆவணங்கள் வழங்க வேண்டும் என கோரி ராசா, மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
குற்றஞ் சாட்டப்பட்டவர்களின் மனுவை நீதிபதி என். வெங்கடவரதன் இன்று தள்ளுபடி செய்து, குற்றஞ் சாட்டப்பட்ட ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தவிட்டு, வழக்கின் விசாரணை ஜூலை 23 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.




