தமிழக அரசு சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுக்கொள்ள, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

ஜிஎஸ்டி வரி வருவாய் இழப்பீடாக மாநில அரசுகளுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக கொடுக்க வேண்டியுள்ள நிலையில், அதை கொடுக்கும் அளவிற்கு நிதி இல்லை என மத்திய அரசு கைவிரித்துள்ளது.
அதேவேளையில் இழப்பீட்டை சரிகட்டும் வகையில் வெளிச்சந்தையில் கடன் வாங்கிக்கொள்ள அனுமதி வழங்க தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை தவிர, பிற மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இதனிடையே, தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்கள் காரணமாக, கடந்த 6 மாதங்களில் மட்டும் அதிமுக அரசு சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக பெற்றுள்ளது. கொரோனா பரவலால் வருவாய் குறைந்ததால், பட்ஜெட் தாக்கலின் போது, அறிவிக்கப்பட்டதை காட்டிலும், கூடுதல் கடன் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜிஎஸ்டி நிலுவைத்தொகைக்காக, தமிழக அரசு 9,627 கோடி ரூபாய் வெளிச்சந்தையில் கடன் வாங்க மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதனால், தமிழக அரசின் கடன் சுமை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.




