ஆஷ்ரம் பள்ளி இடத்தை காலி செய்வது தொடர்பான வழக்கில் லதா ரஜினிகாந்துக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்தின் ஸ்ரீ ராகவேந்திரா எஜுகேஷனல் சொசைட்டி என்ற அறக்கட்டளை சார்பாக சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையில் வாடகைக் கட்டிடத்தில் தி ஆஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு ரஜினிகாந்த்தின் மனைவி லதா செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இதனிடையே கட்டிடத்தில் உரிமையாளரான வெங்கடேஷ் வரலு, பூர்ணச் சந்திரராவ் ஆகியோர் 2014ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 2013 மார்ச் வரையிலான பள்ளி கட்டிடத்தின் வாடகை பாக்கி தொகையான 1.99 கோடி ரூபாயைத் தர உத்தரவிடக் கோரி அதில் வலியுறுத்தி இருந்தனர். வழக்கு நிலுவையில் இருந்த நேரத்தில் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி திடீரென்று பள்ளியின் கேட்டை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி பள்ளி திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன்பிறகு 2018 ஆகஸ்ட் மாதம் இரு தரப்பினரும் ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இடத்தை காலி செய்வதாக பள்ளி அறக்கட்டளை சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
read more: எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவேன்: பார்த்திபன் அறிவிப்பு!
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தங்களால் பள்ளி இடத்தை காலி செய்ய முடியாததால் ஒரு வருட காலத்திற்கு அவகாசம் வழங்க வேண்டுமென ராகவேந்திரா சங்கத்தின் செயலாளர் லதா ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாத வாடகை 8 லட்சம் ரூபாயை முறையாக செலுத்தி வருவதாகவும், ஆகவே அவகாசத்தை இந்த கல்வியாண்டு வரை நீட்டிக்க வேண்டுமென லதா ரஜினிகாந்த் தரப்பு வலியுறுத்தியது.
இதனை ஏற்ற நீதிபதி, ஆஸ்ரம் பள்ளி இயங்கி வரும் கட்டத்தை காலி செய்ய ஏப்ரல் 30ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியும், அதற்குள் காலி செய்யாவிட்டால் ராகவேந்திரா கல்விச் சங்கம் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தும் உத்தரவிட்டார். 2021-22ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்துக்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.