வருமான வரித் துறை வழக்கிலிருந்து சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் அவரது மனைவி ஸ்ரீ நிதி ஆகியோர் சென்னையை அடுத்துள்ள முட்டுக்காட்டில் தங்களுக்கு சொந்தமான சொத்தை கடந்த 2015ம் ஆண்டு விற்பனை செய்தனர். இந்த நில விற்பனை மூலம் கிடைத்த வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என இருவர் மீதும் வருமான வரித் துறை வழக்குப் பதிவு செய்தது.
இதுதொடர்பான வழக்கு சென்னை எழும்பூரிலுள்ள நீதிமன்றத்தில் நடந்த வந்த நிலையில், கார்த்தி சிதம்பரம் எம்.பியானதால் மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென இரண்டு பேரும் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதனை எதிர்த்து கார்த்தி, ஸ்ரீநிதி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி சதீஷ்குமார் முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது கார்த்தி சிதம்பரம் தரப்பில் இருந்து வருமான மதிப்பீட்டு நடைமுறைகளை இருவரும் முடிக்கும் முன்னரே அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது என வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், இருவரையும் விடுவிக்க வருமான வரித் துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கிய நீதிபதி சதீஷ்குமார், வருமான மதிப்பீட்டு நடைமுறைகளை இருவரும் முடிக்கும் முன்னரே இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது நிருபணமாகியுள்ளதாக சுட்டிக்காட்டினார். வழக்கிலிருந்து இருவரையும் விடுவித்தும் தீர்ப்பளித்தார்.ஏற்கனவே கார்த்தி சிதம்பரம் மேலும் சில வருமான வரி வழக்குகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த வழக்கிலிருந்து விடுவித்துள்ளது அவருக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.