ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி, ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நாளை (ஆகஸ்ட் 6 ஆம் தேதி) உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காங்கிரஸ் எஸ்.சி., பிரிவுக்கு அனுமதி வழங்கும்படி, சென்னை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளை தடுக்க கடுமையான சட்டத்தை இயற்ற வலியுறுத்தி, பெரியார் நினைவிடம், காமராஜர் இல்லம், கலைஞர் நினைவிடம், காந்தி மண்டபம், அம்பேத்கர் மணி மண்டபம் ஆகிய ஐந்து இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், இந்த போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கோ, போக்குவரத்துக்கோ எந்த இடையூறும் ஏற்படாது என தெரிவித்தார்.
காவல் துறை தரப்பில், மனுதாரர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரிய இடம், போராட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்ட இடமல்ல என்பதால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், சிவானந்தா சாலை மற்றும் ராஜரத்தினம் ஸ்டேடியம் ஆகிய இடங்கள் மட்டுமே போராட்டம் நடத்த ஒதுக்கப்பட்ட இடம் என்பதால், இதில் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து தெரிவித்தால் அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணாவிரதம் இருக்க தயாராக இருப்பதாக வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்டு, ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்தக் கோரி உடனடியாக காவல் ஆணையருக்கு விண்ணப்பிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க காவல் துறைக்கு உத்தரவிட்டார்.





