அம்பானி, அதானி பொருட்களை புறக்கணிக்கும் இயக்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டுமென விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசுடன் விவசாயிகள் சங்கம் நடத்திய 6ஆவது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. அதில் மத்திய அரசு ஆணவத்துடன் நடந்துகொண்டதாக குற்றம்சாட்டிய விவசாயிகள் சங்கம், போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டுமென அனைத்து தரப்பினருக்கும் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் விவசாயிகள் சங்கங்கள் டிசம்பர் 14-ம் தேதியன்று காத்திருக்கும் போராட்டத்தைத் தொடங்குகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார் மார்க்சிஸ்ட் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
அகில இந்திய விவசாய சங்கக் கூட்டமைப்பின் வேண்டுகோளின் அடிப்படையில், நாடு முழுவதும் அம்பானி, அதானி பொருட்களைப் புறக்கணிக்கும் இயக்கத்தின் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் டிசம்பர் 14-ம் தேதியன்று ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட், பெட்ரோல் பங்க், ஜியோ விற்பனைக் கடைகள் முன்பு ரிலையன்ஸ் பொருட்களைப் புறக்கணியுங்கள் என கோரிக்கை அட்டைகள் ஏந்தி பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம் நடத்திட மார்க்சிஸ்ட் முடிவு செய்துள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
தேசம் காக்கும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து நடக்கக் கூடிய அதானி, அம்பானி பொருட்களைப் புறக்கணிக்கும் இயக்கத்திற்கு ஆதரவு தர வேண்டும் என பொதுமக்களுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.




