ரேஷன் கடை முன்பு வைக்கப்பட்டுள்ள அதிமுக பேனர்களுக்கு எதிராக திமுக வழக்கு தொடர்ந்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி .2,500 ரூபாய் பரிசு தொகையை அரசு வழங்கி வருகிறது. இதனிடையே, பொங்கல் பரிசுக்காக வழங்கப்படும் டோக்கன்களில், அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் புகைப்படங்கள் இடம்பெற்றதாக திமுக குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில், பொங்கல் பரிசில் தலைவர்கள் படம் இடம்பெறக் கூடாது என உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் அமர்வில் இன்று திமுக தரப்பிலிருந்து வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார். தலைவர்கள் படம் இடம்பெறக்கூடாது என்ற உத்தரவை சுட்டிக்காட்டிய அவர், இதனை மீறி பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் ரேஷன் கடைகள் முன் பேனர்கள் வைத்து ஆளுங்கட்சி இடையூறு ஏற்படுத்துகிறது என்று முறையிட்டுள்ளார்.
read more: 7.5 சதவிகித இட ஒதுக்கீடுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு!
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர அனுமதி அளிக்கவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனை ஏற்ற தலைமை நீதிபதி அமர்வு, வழக்கு குறித்து அரசுத்தரப்புக்கு அறிவிக்கை கொடுத்து வழக்கு தாக்கல் செய்ய அனுமதி அளித்தது. இதனையடுத்து வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை திமுக மேற்கொண்டு வருகிறது.