சேகர் ரெட்டி வழக்கில் 2000 ரூபாய் நோட்டுகளை அளித்த வங்கியை கண்டுபிடிக்க முடியவில்லையா?, என
சி.பி.ஐ.க்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
சேகர் ரெட்டி வழக்கில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அளித்த வங்கியை கண்டுபிடிக்க முடியவில்லையா? என்று சி.பி.ஐ.க்கு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சேகர் ரெட்டிக்கு எதிரான ரூ.247.13 கோடி ஊழல் வழக்கிற்கு ஆதாரமில்லை என, சி.பி.ஐ. நீதிமன்றத்தில் கூறி, அந்த வழக்கை முடித்து வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சேகர் ரெட்டிக்கு எதிரான 247.13 கோடி ரூபாய் ஊழல் வழக்கிற்கு ஆதாரமில்லை என்றுசி.பி.ஐ. நீதிமன்றத்தில் கூறி, அந்த வழக்கை முடித்து வைத்தது அதிர்ச்சியளிக்கிறது.
சி.பி.ஐ., 170 பேருக்கு மேற்பட்ட சாட்சிகளை விசாரித்து, 800-க்கும் மேற்பட்ட ஆவணங்களைப் பரிசீலித்த பிறகும், ஆதாரம் கிடைக்கவில்லை. 2000 ரூபாய் புதிய நோட்டுகள் எந்த வங்கியிலிருந்து சேகர் ரெட்டிக்கு கொடுக்கப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஊழல் தொடர்பாக
ஒரு வங்கி அதிகாரியைக் கூட வழக்கில் ஏன் குற்றவாளியாகச் சேர்க்கவில்லை என்று உயர் நீதிமன்றமே கேள்வி கேட்கும் அளவிற்கு ஒரு விசாரணையை நடத்தியிருக்கிறது.
முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் நெருக்கமான சேகர் ரெட்டி வழக்கில் மட்டும்தான், வங்கிகள் கொடுத்த நோட்டுகளுக்கு சீரியல் நம்பரைக் கண்டுபிடிக்க முடியாத அதிசயம் நடந்திருக்கும். அ.தி.மு.க.வின் ஊழல்களுக்கு மத்திய அரசு, உற்ற தோழனாக நின்று, கடந்த நான்கு ஆண்டுகளாகப் போராடுகிறது.
வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் பணம் கைப்பற்றப்பட்டதாக – 16 மாதங்களுக்குப் பிறகு சி.பி.ஐ.யிடம் புகாரைக் கொடுத்துள்ள தேர்தல் ஆணையமோ, வருமான வரித்துறையோ- இந்த அளவுகோலை, ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏன் கடைப்பிடிக்கவில்லை? இதில் வங்கி அதிகாரிகள் மீது வழக்குப் போடும் சி.பி.ஐ. ஏன் சேகர் ரெட்டி விவகாரத்தில் வங்கி அதிகாரிகள் மீது வழக்குப் போடவில்லை?
அ.தி.மு.க. அரசின் ஊழலுக்கு முட்டுக்கொடுத்து, பாதுகாக்கிறது மத்திய அரசு.
2021-ல் அ.தி.மு.க.வுடன் வைக்கும் கூட்டணிக்காகவும், விரும்பிய எண்ணிக்கையில் இடங்களைப் பெறுவதற்கும்தான் இந்த “ஊழல் பாதுகாப்பு ஒப்பந்தமா?, என ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்