திமுகவின் கிராம சபைக் கூட்டங்களால் என்ன பயன் என்று கேட்ட முதல்வருக்கு ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

திமுக சார்பில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கிராம சபை பெயரில் கூட்டங்கள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. எந்தத் தடையையும் எதிர்கொள்ளத் தயார் என அறிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், மக்கள் கிராம சபை என்ற பெயரில் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
தனது பிரச்சாரத்தின் போது இதனை விமர்சித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் கிராம சபை மூலம் மக்கள் பிரச்சினைகள் எதையாவது தீர்த்து வைத்தார்களா? அல்லது மக்கள் அளித்த மனுவையாவது என்னிடம் வந்து கொடுத்தார்களா? என்று கேள்வி எழுப்பினார். கிராம சபை கூட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின். அரசு, முதலமைச்சரை குறை சொல்வதே ஸ்டாலினின் வாடிக்கை என முதல்வர் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் செந்தில் தங்கவேல் என்பவர் தங்கள் பகுதியில் மின்விளக்கு மாற்றப்படும் புகைப்படத்தை பதிவிட்டு, திமுகவின் மக்கள் கிராம சபை என்ன செய்துவிடும் என்பவர்களுக்கு கவுண்டம்பாளையம் தொகுதி வெள்ளக்கிணறுவில் நடைபெற்ற கிராம சபையில் அதிக வரி செலுத்தும் எங்கள் வீதியில் தெரு விளக்கு இல்லாததை 9 ஆண்டுகளாக அதிமுக எம்.எல்.ஏ. வால் கண்டுகொள்ளவில்லை என்று எடுத்துரைத்தேன். இதோ இன்று மாற்றப்பட்டுவிட்டது” என ட்விட்டரில் பதிவிட்டார்.
read more: நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை: காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்!
இதனை சுட்டிக்காட்டிய திமுக தலைவர் ஸ்டாலின், “கிராம சபை நடத்துகிறார்களே அதனால் என்ன பயன், ஸ்டாலின் என்ன பிரச்சினையைத் தீர்க்கப் போகிறாரா? என்று சில நாட்களுக்கு முன் கேட்டார் முதல்வர்! ஆம், நான் பிரச்சினைகளைத் தீர்ப்பவன்தான்.
கவுண்டம்பாளையம் தொகுதி வெள்ளக்கிணறுவில் நடைபெற்ற கிராம சபையில் அதிக வரி செலுத்தும் எங்கள் வீதியில் தெருவிளக்கு இல்லாததை 9 ஆண்டுகளாக ஆளும் எம்எல்ஏவால் கண்டுகொள்ளப்படவில்லை என்று ஒருவர் சொன்னார். இன்று அரசு சார்பில் தெருவிளக்கு அமைத்துக் கொடுத்துள்ளார்கள்” என்று முகநூலில் பதிவிட்டுள்ளார். யாரிடம் சொன்னால் வேலை நடக்கும் என்பது மக்களுக்குத் தெரியும் முதல்வரே எனவும் பதிலடி கொடுத்துள்ளார்.




