ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து திமுகவில் இணைந்த ஜோசப் ஸ்டாலினுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதில்லை என கடந்த டிசம்பர் மாதக் கடைசியில் அறிவித்தார். அதன்பிறகும் ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், தன்னை அரசியலுக்கு அழைத்து மேலும் புண்படுத்த வேண்டாம் என ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தொடர்ச்சியாக மாற்றுக் கட்சிகளில் இணைந்து வந்தனர். திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் ரஜினி மக்கள் மன்ற தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் கே.செந்தில் செல்வானந்த், தேனி மாவட்ட செயலாளர் ஆர்.கணேசன் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.
read more: உதயசூரியன் சின்னத்தில் போட்டி: திருமாவளவன் புதிய பதில்!
இந்த நிலையில் ஜோசப் ஸ்டாலினுக்கு மாநிலப் பொறுப்பு வழங்கியுள்ளது திமுக. அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பில், திமுக சட்ட திட்ட விதி 31, பிரிவு 15இன் படி சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு இணைச் செயலாளராக டாக்டர் ஜோசப் ஸ்டாலின் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே இருப்பவர்களுடன் இவர் இணைந்து பணியாற்றுவார் என்று தெரிவித்துள்ளார்.