50 தொகுதிகளில் கொமதேக வலுவான வாக்கு வங்கியைக் கொண்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலின் போது திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, கொமதேக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதே கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. மதிமுக, விசிக, கம்யூனிஸ்டுகள் தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என அறிவித்துவிட்டன.
இந்த நிலையில் கொமதேக ஈரோடு மேற்கு மாநகர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஜி.ஆர்.மலைச்சாமி தலைமையில் ஈரோடு அருகே மேட்டுக்கடையில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், பாஜகவுடன் கூட்டணி என்று முதல்வரும், துணை முதல்வரும் அறிவித்துள்ளனர். ஆனால் பாஜக எடப்பாடி பழனிசாமியை இதுவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னும் சில நாட்கள் பொறுத்து இருந்தால் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் இருக்குமா? இருக்காதா? என்பது தெரியவரும் என்று கூறினார்.
read more: 4 மாதங்களில் திமுக ஆட்சி அமையும்: ஸ்டாலின் பேச்சு!
திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேசுவதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது என்ற அவர், “கடந்த தேர்தல்களில் கொமதேக 72 தொகுதிகளில் தனியாக போட்டியிட்டுள்ளது. 50 தொகுதிகளில் வலிமையான வாக்குகளை கொண்டுள்ளது. கொமதேகவின் வலிமையை கூட்டணி தலைமை புரிந்துகொண்டிருக்கிறது. எங்களுடைய வலிமைக்கு தகுந்தவாறு தொகுதிகளை கேட்டுப்பெறுவோம்” எனவும் அறிவித்தார்.




