பக்தியை அரசியல் வியாபாரப் பொருளாக ஆக்குவதற்கு சிலர் முயல்கிறார்கள் என பாஜகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

திமுகவின் சிறுபான்மை பிரிவு சார்பில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ திடலில் நேற்று இதயங்களை இணைப்போம் என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன், மமக தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட இஸ்லாமிய இயக்கத் தலைவர்கள் அதில் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய ஸ்டாலின், இந்தக் கூட்டத்தைப் பார்க்கும்போது இது சிறுபான்மையினர் அணி நடத்தும் நிகழ்ச்சி போல இல்லை. பெரும்பான்மை மக்கள் அனைவரும் சேர்ந்து நடத்தும் நிகழ்ச்சியாகத்தான் இருக்கிறது. வேறு வேறு இறை நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும், நாம் அனைவரும் தமிழர்கள். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்றார்.
பக்தி மற்றும் பகுத்தறிவு பிரச்சாரம் கருத்து விவாதமாக இருக்கலாமே தவிர கைகலப்பு மோதலாக மாறிவிடக் கூடாது என்பதில் திராவிட இயக்கம் தெளிவாக இருந்ததாகவும், அதனால்தான் பெரியார் மண்ணில் எந்தக் கோயிலுக்கும் எந்தச் சேதாரமும் ஏற்பட்டதில்லை. ஆனால், இன்றைக்கு பக்தியை வியாபாரப் பொருளாக, அதுவும் அரசியல் வியாபாரப் பொருளாக ஆக்குவதற்கு சிலர் முயல்கிறார்கள் எனவும் கூறிய ஸ்டாலின்,
“சொல்வதற்கு சாதனைகளோ, கொள்கையோ இல்லாததால் மக்களின் ஆன்மிக உணர்வைத் தூண்டிவிட்டுக் குளிர்காய நினைக்கிறார்கள். அரசியலுக்கும் ஆன்மிகத்துக்குமான வேறுபாட்டை நன்கு உணர்ந்தவர்கள் தமிழக மக்கள். அவர்களை யாரும் ஏமாற்ற முடியாது. அரசியல் என்பது மக்களின் உரிமை சார்ந்தது. ஆன்மிகம் என்பது மனம் சார்ந்தது” என்று குறிப்பிட்டார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானமா? அதிமுக ஆதரிக்கிறது.குடியுரிமைத் திருத்தச் சட்டமா? அதிமுக ஆதரிக்கிறது. முத்தலாக் சட்டமா? அதிமுக ஆதரிக்கிறது. இதை விட அண்ணாவுக்குச் செய்யும் துரோகம் இருக்க முடியுமா? இதைவிடச் சிறுபான்மையினருக்கு வேறு துரோகம் செய்ய முடியுமா? என்றெல்லாம் கேள்வி எழுப்பிய அவர்,பாஜக அரசாக இருந்தாலும்- அதிமுக அரசாக இருந்தாலும் அவர்கள் அனைத்து மக்களுக்கும் எதிரானவர்கள். இந்தக் கூட்டணியை நிராகரிக்க வேண்டியது அனைவரது கடமையும் ஆகும் என்று கூறினார்.
read more: அமித் ஷாவின் தமிழக வருகை திடீர் ரத்து!
மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எல்லா இடங்களுக்கும் செல்ல வாய்ப்பு இல்லை என்றாலும் – குறிப்பிட்ட சில இடங்களுக்கு – அதாவது யார் யார் நிச்சயமாகத் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேனோ அந்த இடங்களுக்கு கட்டாயமாகச் சென்று கொண்டிருக்கிறேன் இங்கே காதர் மொய்தீன் 7 இடங்களில் மட்டும் அவர்களுக்கு வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வந்தது எனச் சொன்னார் அதைக்கூட விடக்கூடாது என ஸ்டாலின் பேசினார்.




