டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக வரும் 5ஆம் தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்கள், மின் திருத்தச் சட்ட முன்வடிவு ஆகியவற்றை நிபந்தனையின்றி ரத்து செய்யக் கோரி விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது. பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு எட்டாவது நாளாக போராடி வருகின்றனர். டெல்லி போராட்டத்துக்கு நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.
கொரோனா அவசரத்தை பயன்படுத்தி மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல், நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்கப்படாமல் இந்த சட்டத்தை கொண்டுவந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை, கார்பரேட்டுக்கள் கைகளில் விவசாயத்தை சிக்கவைக்கும் முயற்சி என விவசாய சங்கங்கள் விமர்சிக்கின்றன. இதற்கு ஆதரவாக தமிழகத்தில் இடதுசாரி இயக்கங்கள் நாளை போராட்டம் நடத்துகின்றன.
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது. அதில், முக்கியமாக விவசாயிகள் போராட்டம் தொடர்பாகவே விவாதிக்கப்பட்டது. முடிவில் டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இதுபற்றி நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், பசியும், பட்டினியுமாகக் காத்துக் கிடந்து, தங்களை வாட்டி வதைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், வேளாண்மையையும் பாதுகாத்திட டிராக்டர்களுடன் சென்று, தீரத்துடன் போராடி வருவதற்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்த போராட்டம் மத்திய பாஜக அரசை அசைத்து அதிர்வடையச் செய்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகளின் தூண்டுதல் இது என்று எள்ளி நகையாடியவர்கள் போலீஸை வைத்துப் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி, கூட்டங்களைக் கலைத்துக் குலைக்கப் பார்த்தவர்கள் – தற்போது, பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பது, ஜனநாயகத்திற்குக் கிடைத்திருக்கும் முதல் கட்ட வெற்றி என இக்கூட்டம் கருதுகிறது என்றும் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.
இந்த வேளாண் விரோத சட்டங்களை ஆதரித்து, அதற்கு முழு மூச்சுடன் வக்காலத்து வாங்கிய ஒரே முதலமைச்சர் இந்தியாவில் உண்டு என்றால், அது அதிமுக முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமிதான். இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் போட்டி போட்டுக் கொண்டு பா.ஜ.க.வை விட ஒரு படி மேலே சென்று ஆதரித்த கட்சி என்றால் அது அதிமுக மட்டும்தான் எனத் தீர்மானம் குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு உணர்வு பூர்வமான ஆதரவு தெரிவித்தும் வருகின்ற டிசம்பர் 5 அன்று காலை 10.00 மணி அளவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், திமுக சார்பில், கொரோனா கால முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளைக் கடைப்பிடித்து, அற வழியில், ஜனநாயக முறையில், மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக் கொடி ஏந்தி, ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டதாக திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.




