9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியுள்ள நிலையில், சில இடங்களில் மட்டும் வாக்கு எண்ணும் பணி தாமதமடைந்துள்ளது.
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் 23 ஆயிரத்து 998 பதவியிடங்களுக்கு நடந்த இந்த தேர்தலில் 79 ஆயிரத்து 433 பேர் போட்டியிட்டனர்.
14 ஆயிரத்து 573 வாக்குச்சாவடிகளில் நடந்த இந்த தேர்தலில் இருகட்டங்களையும் சேர்த்து மொத்தம் 77.95 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்ட 41 ஆயிரத்து 500 வாக்குப்பெட்டிகள் 74 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. இதைத்தொடர்ந்து, ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கட்டுகளையும் பிரித்து அதில் உள்ள வாக்குச்சீட்டுகளில் யார்-யாருக்கு வாக்குகள் பதிவாகி இருக்கிறது என்பதை பார்த்து வேட்பாளர் வாரியாக பிரித்து வைக்கப்படும். இதன்பின்னர் அவை எண்ணப்படுகிறது.
ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு குறைவான வாக்குகள் என்பதால் இந்த பதவிகளுக்கான தேர்தல் முடிவுகள் வாக்குகள் எண்ண தொடங்கிய சில மணி நேரத்தில் இருந்து தெரிய தொடங்கும். பெரும்பாலும் மதியத்துக்குள் இந்த பதவிகளுக்கான முடிவுகள் தெரிந்து விடும். ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிக வாக்குகள் என்பதால் இந்த வாக்குகளை எண்ணி முடிக்க அதிக நேரம் ஆகலாம் என தெரிகிறது. மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவியை பொறுத்தமட்டில் 1 லட்சம் முதல் 1½ வரையிலான வாக்குகளை எண்ண வேண்டியது இருப்பதால் இந்த பதவிக்கான முடிவை அறிவிக்க நள்ளிரவு வரை ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கை சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஒரு வேட்பாளருக்கு ஒரு ஏஜெண்டு என்ற அடிப்படையில் வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவை அறிவிக்கும்போது பல இடங்களில் மோதல்கள் நடப்பதற்கு வாய்ப்புள்ளதால் வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த 9 மாவட்டங்களை தவிர்த்து ஏனைய 28 மாவட்டங்களில் 789 காலி இடங்களுக்கு நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் சில இடங்களில் வாக்கு எண்ணிக்கு தாமதம் அடைந்துள்ளது. குன்றத்தூர், மரக்காணம், காட்பாடி ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதம் அடைந்துள்ளது. அடிப்படை வசதிகள் இல்லை என்றும், கொரோனா காரணமாக சமூக இடைவெளியை பின்பற்றாமல் நெருக்கமாக நிற்க வேண்டி உள்ளதாகவும் கூறி முகவர்கள் அடுத்தடுத்து புகார் தெரிவித்து வருவதால் வாக்கு எண்ணிக்கை தாமதம் அடைந்துள்ளது.