சூரப்பாவிற்கு ஆதரவாக தமிழக அரசுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடிதம் எழுதியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் சூரப்பாவிற்கு எதிராக பேராசிரியர் பணி நியமனத்தில் 200 கோடி ஊழல், தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் 80 கோடி ஊழல், மகளுக்கு பணி வழங்கியது, அரியர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு தவறான தகவல்களை அளித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. இதனை விசாரிக்க தமிழக அரசு, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்தது.
விசாரணை சரியாக நடைபெறவும், ஆவணங்கள் அழிக்கப்படாமல் இருக்கவும் சூரப்பாவை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனாலும், தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்த சூரப்பா, விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக கூறினார்.
தற்போது சூரப்பா விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் 5 பக்க கடிதம் ஒன்றை எழுதி இருப்பதாகவும் அதில் சூரப்பா அப்பழுக்கற்றவர் என்றும் துணைவேந்தர் பொறுப்பில் அவர் நேர்மையாகவும் திறம்படவும் செயலாற்றி வருவதாகவும் ஆளுநர் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தைச் சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக ஆளுநர் பன்வாரிலால் கடந்த 2018ஆம் ஆண்டு நியமித்தார். தமிழகத்தில் எண்ணற்ற கல்வியாளர்கள் இருக்கும்போது கர்நாடகத்தைச் சேர்ந்தவரை தமிழக அரசின் ஆலோசனை இன்றி ஆளுநர் தன்னிச்சையாக நியமித்தார் என்று அப்போது குற்றச்சாட்டுக்களும் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.