தமிழக அரசின் மருத்துவ ரேங்க் பட்டியலில் பிற மாநிலத்தவர்கள் இடம்பிடித்தது எப்படி? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக அரசின் மருத்துவ ரேங்க் பட்டியலில் பிற மாநிலத்தவர்கள் இடம்பிடித்தது எப்படி? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ரேங்க் பட்டியல்
மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக அ.தி.மு.க. அரசு ரேங்க் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில், வெளிமாநில மாணவர்களும் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சியையும், ஆழ்ந்த வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. பிற மாநில மாணவர்கள்
2020-21ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பிற்கான அரசு ஒதுக்கீட்டுப் பட்டியலில், முதல் 10 மாணவர்களில் இரண்டாம் இடம் பிடித்துள்ள மாணவி, கேரள மாநில மருத்துவ ரேங்க் பட்டியலில் 5ம் இடத்தில் இருக்கிறார்.
தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டுள்ள ரேங்க் பட்டியலில் இடம் பெற்றுள்ள 7 பேரின் நீட் பதிவு எண்கள், தெலங்கானா ரேங்க் பட்டியலிலும் உள்ளன.
இடம்பிடித்தது எப்படி?
2017-ல் நீட் தேர்வை அனுமதித்ததில் இருந்து இன்று வரை, ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் நடக்கும் நீட் தேர்விலும், அந்த நீட் தேர்வின் அடிப்படையில் அ.தி.மு.க. அரசு தயாரிக்கும் ரேங்க் பட்டியலிலும், முறைகேடுகளும், மோசடிகளும் தடையின்றித் தொடர்கின்றன.
ஒரே மாணவர் எப்படி இரு மாநிலங்களின் ரேங்க் பட்டியலில் இடம்பெற முடியும்?. அப்படியென்றால், அந்த மாணவர் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக எப்படி இருப்பிடச் சான்றிதழ் பெற்றார்? தெலங்கானா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களின் ரேங்க் பட்டியலில் இடம் பெற்றவர்கள் தமிழகத்தில் வெளியிடப்பட்டுள்ள ரேங்க் பட்டியலில் எப்படி இடம் பெற்றார்கள்?
கண்டனம்
அப்படி இடம்பெற்றவர்கள் எப்படி தமிழகத்தில் இருப்பிடச் சான்றிதழ் பெற்றார்கள்? நீட் தேர்வு மோசடிகளை எந்தவித நெருடலும் இன்றி, அதிமுக அரசு செய்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.
மாணவர்களின் உயிருடன் விபரீத விளையாட்டு நடத்துவதே அ.தி.மு.க. அரசின் பொழுதுபோக்காகப் போய்விட்டது.
நீக்க வேண்டும்
ஆகவே 2020-2021ஆம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ் – பிடிஎஸ் கல்வியில் சேருவதற்கான நீட் ரேங்க் பட்டியலில் உள்ள முறைகேடுகள் உடனடியாகச் சரி செய்யப்பட்டு, தமிழக மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதை அதிமுக அரசு உறுதி செய்ய வேண்டும்.
வேறு மாநிலங்களின் ரேங்க் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்களை நீக்கம் செய்வதோடு; அவர்கள் எப்படி தமிழக ரேங்க் பட்டியலில் நுழைந்தார்கள், யார் யார் அதற்கு உடந்தை என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
விசாரணை
அதுமாதிரி இருப்பிடச் சான்றிதழ் கொடுத்த அதிகாரிகள் யார் யார், அப்படிக் கொடுக்கச் சொல்லிப் பரிந்துரைத்த அமைச்சர்கள் யார் யார், பரிந்துரைக்குப் பெற்ற பரிசு என்ன என்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.