ஓபிஎஸ் நடத்துவது தர்மயுத்தம் அல்ல துரோக யுத்தம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், அதிமுகவின் 50வது ஆண்டுவிழா நடைபெற்றது. இதில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.வி.உதயக்குமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்குப்பின் பேசிய ஆர்.வி.உதயக்குமார், எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சியின் காரணமாக பன்னீர்செல்வம் கட்சியில் இணைக்கப்பட்டு துணை முதல்வர், கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. இருந்த போதிலும், அவரிடம் இருந்து முழு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.
சட்டசபை தேர்தலின் போது தனது தொகுதியை தவிர்த்து மற்ற தொகுதியில், தேர்தல் பிரசாரத்திற்காக ஓபிஎஸ் செல்லவில்லை. வழக்கம்போல் எதிர்கட்சி தலைவர் பதவி யாருக்கு என்று வரும்போது மவுனயுத்தத்தை தொடங்கினார். அதற்கு பெயர் தர்மயுத்தம் என்று சொல்லுவார். அது தர்மயுத்தம் அல்ல துரோகயுத்தம். எப்போதெல்லாம் தனது பதவிக்கு ஆபத்து வருகிறதோ அப்போது எல்லாம் கட்சிக்கு ஆபத்து போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்குவார். அவருடைய யுத்தங்கள் அனைத்தும் தோல்வியில்தான் முடிந்துள்ளன. அவர் பல வதந்திகளை உருவாக்கி வருகிறார். சட்டசபை உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்கள் என அனைவரும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அணிவகுத்து நிற்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.