போதைப் பொருள் குறித்து யோக்கிய சிகாமணி எடப்பாடி பழனிச்சாமி கூறும் கருத்துக்கள் வேடிக்கையாக உள்ளது. தமிழ்நாட்டில் எங்கும் கஞ்சா சாகுபடி இல்லை, எங்காவது இருந்தால் எடப்பாடி பழனிச்சாமியை சொல்லச் சொல்லுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை சார்பில் 11ஆவது சர்வதேச யோகா தினம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், இந்திய மருத்துவத்துறை மற்றும் ஹோமியோபதி ஆணையர் விஜயலட்சுமி அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவிகள், மருத்துவமனையில் உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு யோகா செய்தனர்.
யோகா கல்லூரிகள் அதிகமுள்ள மாநிலம்
நிகழச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் யோகா தினத்தை கடைப்பிடித்து வருகிறோம். யோகா மற்றும் இயற்கை மருத்துவம் உடலை தூய்மையாக்குகிறது, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக ஆக்குவது மட்டுமல்லாமல் தனி மனிதன் ஆயுளை நீட்டிக்கிறது, நோய் எதிர்ப்பு சக்திகளை கூடுதல் ஆக்குவதற்கு யோகா பெரிய அளவில் உதவுகிறது. இந்தியாவில் அதிகபட்சமாக யோகா மருத்துவக் கல்லூரிகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். வரும் 30ந் தேதி 59 சித்த மருத்துவர்கள் உட்பட 171 பேருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணி ஆணை வழங்க உள்ளார், என்றும் இந்திய மருத்துவத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மிக முக்கிய பங்குகளைத் தருகிறது என்று கூறினார். அதிக யோகா மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு, யுனானி யோகா சித்தா என ஐந்து மருத்துவத் துறைகளும் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், சித்த பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இருந்தார். பிறகு சட்டமன்றத்தில் அந்த மசோதா திரும்ப பெற்றுக் கொளளப்பட்டது. தற்பொழுது சட்டபூர்வமான திருத்தம் நிறைவடைந்து எதிர்வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்து வரக்கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடர்பான மசோதாவை தாக்கல் செய்யலாம் என்று முதலமைச்சர் சொல்லி உள்ளார்.
சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கான கட்டமைப்புகள் முடிந்து இதே வளாகத்தில் ரூபாய் 2 கோடி செலவில் அலுவலகம் தயாராக உள்ளது. மாதவரம் பகுதியில் 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடத்தையும் தேர்வு செய்து தயாராக உள்ளது, சித்த பல்கலைக்கழக மசோதா சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றியதற்கு பிறகு சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் பெற்று நிச்சயம் தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும் என்று கூறினார். எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பிற்கான விண்ணப்ப தேதி 25ஆம் தேதி வரை இருக்கிறது, இப்பவும் நேரம் இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
யார் எதைச் சொல்வது? தகுதி வேண்டாமா?
எதை யார் சொல்ல வேண்டும் என்ற தகுதி வேண்டும், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக இருந்த போதுதான் சட்டமன்றத்தில் இன்றைய முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து போதை வஸ்துக்களின் நடைமாற்றம் தமிழகத்தில் அதிகரித்து இருக்கிறது குறிப்பாக தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் அனைத்தும் தமிழ்நாட்டில் அதிக அளவில் இருக்கிறது என்று சொன்னார், அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக மறுத்தார். அடுத்த நாளே 21 சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னையில் தாராளமாக கிடைக்கும் போதை வஸ்துக்களை சட்டமன்றத்திற்கு சென்று இன்றைய தமிழக முதல்வர் காட்டினார்.

உண்மையிலேயே போதை வஸ்துக்களை தடுக்க வேண்டும் என்ற நல்ல முதல்வராக இருந்தால் எடப்பாடி பழனிசாமி என்ன செய்திருக்க வேண்டும்? இது எங்கு கிடைத்தது என்று சொல்லுங்கள் உடனடியாக நான் நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொல்லி இருக்க வேண்டும், மாறாக சபாநாயகரை கொண்டு 21 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியைப் பறிக்க நடவடிக்கைகளை எடுத்தார். அந்த யோக்கிய சிகாமணி இதைப்பற்றிச் சொல்வது வேடிக்கையான ஒன்று. போதை, குட்கா வழக்குகள் சிபிஐயிடம் உள்ளது. இந்த
ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து தான் அண்டை மாநிலமான ஆந்திராவில் நான்காயிரம் ஏக்கர் கஞ்சா பயிரிடுவதை இங்கிருக்கும் காவல்துறை உயர் அதிகாரி சொல்லி ஆயிரம் கோடி மதிப்பில் ஆனந்த கஞ்சா அழித்தொழிக்கப்பட்டது.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் கஞ்சா சாகுபடி 0% சதவீதமாக உள்ளது, எங்கேயாவது கஞ்சா சாகுபடி செய்யப்படுகிறது என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னால் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தான் தமிழ்நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை வஸ்துகளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து ஆண்டு தோறும் கின்னஸ் சாதனை படைத்து வருகிறோம். போதைப் பொருட்களை விற்கும் சமூக விரோதிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து மற்றும் மிகப்பெரிய தண்டனைக்கு உள்ளாக்கி சிறையில் அடைப்பது வரை நடவடிக்கைகளை தொடர்ந்து இந்த அரசு எடுத்து வருகிறது.
கடந்த ஆண்டுகளில் பெருகியிருந்த போதை நடமாட்டத்தைக் குறைத்து, தற்பொழுது மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, இன்றைக்கு கஞ்சா பூஜ்யம் சதவிகித சாகுபடி என்ற நிலையை இந்த அரசு உருவாக்கி இருக்கிறது என்பதை எடப்பாடி பழனிசாமி நன்கு உணர வேண்டும் எனத் தெரிவித்தார்.