பாதுகாப்புப் படைகள் சார்பில் சென்னையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இந்திய பாதுகாப்பு படைகள் சார்பில் பதினோராவது சர்வதேச யோகா தினம் இன்று சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர காவல்படை, துணை ராணுவ அமைப்பான தொழில் பாதுகாப்பு படை சி.ஐ.எஸ்.எப் மற்றும் என்.சி.சி-யைச் சேர்ந்த சுமார் 500 பேர் சென்னையில், இந்திய கடற்படைத் தளமான ஐ என் எஸ் அடையார் அருகிலுள்ள அழகிய கடற்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

“ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா” என்ற கருப்பொருளில் அமைந்த பல்வேறு யோகாசனங்களில் அவர்கள் ஈடுபட்டனர்.தென்னிந்திய பகுதிகளுக்கான இந்திய ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர் சிங் பிரார், முப்படைகளின் மூத்த அதிகாரிகள் மற்றும் பலர் தங்கள் குடும்பத்தினருடன் இந்நிகழ்வில் பங்கேற்றனர். யோகா பயிற்சி மூலம் முழுமையான ஆரோக்கியம் மற்றும் மன உறுதியை அடைவதில் முப்படைகளும் இணைந்து செயலாற்றுவதை இந்நிகழ்ச்சி பிரதிபலித்தது. வாழும் கலை அமைப்புடன் தொடர்புடைய பாரம்பரிய யோகா நிபுணர் திரு. சிவாஜி பாட்டீல் பல்வேறு ஆசனங்களை செய்து காண்பித்து வழிகாட்டினார்.
உலகளவில் யோகா தின கொண்டாட்டங்கள் பத்தாண்டுகளுக்கு மேல் கொண்டாடப்பட்டு வருவதை குறிக்கும் வகையிலும் இந்நிகழ்ச்சி அமைந்தது. யோகா தின நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய லெப்டினன்ட் ஜெனரல் கே.எஸ். பிரார், முப்படை வீரர்கள் மற்றும் பொதுமக்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் யோகா முக்கியமானது என்றார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது வெளிப்படையாக தெரியவந்தது போலவே, ஆயுதப்படைகள் எப்போதும் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஒன்றுபட்டு செயல்படுகின்றன என்று அவர் கூறினார்.

ஒருங்கிணைந்த அணுகுமுறை என்பது இந்திய பாதுகாப்புப் படைகளின் முக்கிய அம்சமாகும் என்று அவர் தெரிவித்தார். யோகா மனதுக்கும் உடலுக்கும் இடையிலான இணக்கத்தை மையமாகக் கொண்ட பண்டைய இந்திய பாரம்பரியத்தின் விலைமதிப்பற்ற பரிசாகும். இந்திய ஆயுதப் படைகள் யோகாவின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து, தங்களது உடற்பயிற்சி பாடத்திட்டத்தில் அதை ஏற்றுக்கொண்டுள்ளன.