புதுச்சேரிக்காக உயிர்த்தியாகம் செய்யத் தயார் என்று முதல்வர் நாராயணசாமி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு ஆதிக்கத்தின்கீழ் இருந்த புதுச்சேரியின் விடுதலை நாள் ஆண்டுதோறும் நவம்பர் 1-ந் தேதி கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டுக்கான புதுச்சேரி விடுதலை நாள் இன்று கொண்டாடப்பட்டது. விடுதலை நாள் விழாவில், அம்மாநில முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
விடுதலையில் பயன்
மத்திய அமைச்சர் நிதின்கட்கரி விழுப்புரத்தில் இருந்து புதுவை வரை 4 வழிசாலைத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார். காரைக்காலில் இருந்து கேரளத்திற்கு அகல ரயில் பாதை அமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயன் கருதாத பலரது தியாகத்தினால் இந்த விடுதலை கிடைத்துள்ளது. விடுதலையின் பயன்கள் மக்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்பது தியாக தலைவர்களின் கனவு. அதை நிறைவேற்றித் தருவது எங்களது கடமை.
உயிர்த்தியாகம்
எத்தகைய இடையூறுகள் வந்தாலும் அதனை முறியடித்து மக்கள் சுதந்திரமாக பாதுகாப்பாக வளமாக நலமாக வாழ்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுப்பதை கடமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம். இதற்காகவும் புதுவையின் தனித்தன்மையை உரிமைகளை பாதுகாக்கவும் உயிர்த் தியாகம் செய்யவும் தயாராக உள்ளதாக சூளுரைக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்




