திமுக கூட்டணி நாட்டிற்கு தேவை அதனால் வந்துள்ளேன் என ம.நீ.ம கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற பின் ம.நீ.ம கட்சித்தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் அழைத்ததின் பேரில் சந்தித்ததாகவும், ராஜ சபாவில் நுழைவதற்கான ஏற்பாடுகளை செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தினார் என்றும், வேட்பாளர் தாக்கல் தொடர்பாக அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறினார்.

மேலும், மக்களவையில் தான் தன்னுடைய குரல் முதல் முறையாக ஒலிக்க இருந்தாலும், தமிழ்நாட்டுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து தான் வருகிறேன் என கூறினார்.
தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என கூறிய அவர், தான் பேசியது தவறு இல்லை என திட்டவட்டமாக கூறினார்.

அதேபோல், இந்த விவகாரம் அரசியல் ஆக்கப்பட்டு வருவதாக கூறிய அவர், என்னுடைய அன்பு கர்நாடக, ஆந்திரா, கேரளா மக்களுக்கு புரியும் என்றும், ஏற்கனவே நான் பல மிரட்டல்களை சந்தித்துள்ளதாகவும், இது ஒரு ஜனநாயக நாடு, எனக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளது என்றார்.
திமுக குடும்ப அரசியல் என கூறினீர்கள் என்ற கேள்விக்கு, திமுக கூட்டணி நாட்டிற்கு தேவை அதனால் வந்துள்ளேன் என தெரிவித்தார்.