ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கமாட்டேன் எனச் சொன்னது ஏமாற்றமளிப்பதாக கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜனவரியில் கட்சி தொடக்கம், டிசம்பர் 31 அதற்கான அறிவிப்பு வெளியாகும் என நடிகர் ரஜினிகாந்த் கடந்த 3ஆம் தேதி அறிவித்தார். 30 ஆண்டுகாலமாக ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் எனக் காத்திருந்த அவரது ரசிகர்கள் இதனால் பெருமகிழ்ச்சிக்கு உள்ளாகினர். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜகவிலிருந்து வந்த அர்ஜுன மூர்த்தியையும், மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்தார் ரஜினிகாந்த்.
சமீபத்தில் அண்ணாத்தே படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. ரஜினிக்கு பாதிப்பு இல்லை என்றாலும் கூட சீரற்ற ரத்த அழுத்தம் காரணமாக அவர் அப்பல்லோவில் சேர்ந்து 3 நாள் சிகிச்சைக்குப் பிறகு சென்னை திரும்பினார். அவரை கொரோனா பாதிப்பு அபாயமுள்ள எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இதனால் தான் கட்சி தொடங்கி அரசியலுக்கு வரவில்லை என இன்று அறிவித்து, மன்னிப்பு கோரியுள்ளார் ரஜினிகாந்த். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோலவே கமல்ஹாசன், பொன்.ராதாகிருஷ்ணன், குஷ்பு ஆகியோரும் தாங்கள் ஏமாற்றமடைந்ததாகத் தெரிவித்தனர்.
மயிலாடுதுறையில் நிகழ்வு ஒன்றில் பேசிய கமல்ஹாசன், பிரச்சார பயணம் முடிந்தவுடன் சென்னை சென்று ரஜினியை சந்திப்பேன், சந்தித்த பின் உங்களுக்கு நான் சேதி சொல்கிறேன். ரஜினியின் இந்த அறிவிப்பில் ஏமாற்றம் இருந்தாலும் அவருடைய ஆரோக்கியம் மிகவும் முக்கியமான விஷயம். என் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும். எங்கிருந்தாலும் நலமாக வாழ வேண்டும் என கருத்து கூறினார். ஏற்கனவே ரஜினிகாந்துடன் இணைந்து செயல்படத் தயார் என கமல் தெரிவித்த நிலையில், தற்போது அவரது ஆதரவையாவது கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
read more:
ரஜினியின் அறிக்கை ஒட்டுமொத்த மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தாலும்கூட ஏற்றுக்கொள்கிறோம் என்ற பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக இதனால் எந்த வகையிலும் பாதிக்கப்படப் போவதில்லை எனவும், அரசியலுக்கு .வரவில்லை என்பதற்காக தவறாக விமர்சனம் செய்வது கூடாது என்றும் தெரிவித்தார்.
“ரஜினிகாந்த் சார், உங்களுடைய முடிவு அனைத்து தமிழர்களின் இதயங்களையும் உடைத்துவிட்டது. ஆனால் உங்களுடைய ஆரோக்யம் மற்றும் உடல்நலத்திற்கு முன்பு வேறெதுவும் பெரிதல்ல”எனக் குறிப்பிட்டு ரஜினிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் பாஜகவின் குஷ்பு.