எம்.பி.க்களுக்கு இந்தியில் கடிதம் அனுப்பப்பட்ட வழக்கில், மொழிப் பிரச்சினைகள் மீண்டும் தொடரக்கூடாது என்று மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், அவர் கூறியிருப்பதாவது:-
இந்தியில் கடிதம்
தமிழக அரசுக்கும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு இந்தி மொழியில் கடிதம் அனுப்பக்கூடாது. ஆங்கிலத்தில் மட்டுமே கடிதங்கள் அனுப்ப வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில், மனுதாரருக்கு தவறுதலாக ஆங்கில கடித இணைப்பு அனுப்பப்படவில்லை. பின்னர் ஆங்கில கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆங்கில கடிதம்
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ஆங்கில கடிதம் இதுவரை வரவில்லை. புதிய நாடாளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவுக்கு அனுப்பிய கடிதமும் இந்தியில் தான் அனுப்பப்பட்டுள்ளது. இன்று அடிக்கல் நாட்டிய நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ஆங்கில கடிதம் வந்தடைந்தது எனத் தெரிவிக்கப்பட்டது.
மொழிப் பிரச்சினை கூடாது
இதையடுத்து நீதிபதிகள், இந்தியா பல மொழிகளைக் கொண்டது. இதுபோல் மொழிப்பிரச்சினைகள் மீண்டும் தொடரக்கூடாது. மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றனர். பின்னர், வழக்கின் விசாரணையை வரும் 18-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.