வேளாண் சட்டத்தை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் அதில் வேளாண் சட்டத்தை திரும்ப மத்திய அரசு பெற வேண்டும். அதற்கு முதலமைச்சர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கவேண்டும் என அந்த கடித்ததில் கூறியுள்ளார். அதில் கடிதத்தில் எழுதி உள்ளது யாதெனில்
விலை உறுதி அளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் சட்டம் 2020, விவசாய விளைபொருட்கள் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம் 2020, அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களையும் நாடாளுமன்றம் இயற்றியிருப்பது நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் குறிப்பாக தமிழக விவசாயிகள் மத்தியிலும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி இருக்கிறது.
தமிழகம் முழுவதும் இச்சட்டங்களை எதிர்த்துப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்றால் விவசாயிகள் நம் நாட்டின் உயிரோட்டமானதும், விலை மதிப்பற்றதுமான அரிய சொத்துகள். அவர்களின் தேவை அறிந்து அவற்றை நிறைவேற்றும் கடமை உணர்ச்சியுள்ள மாநில அரசு மட்டுமே பாதுகாவலாக இருக்க முடியும். அந்த அடிப்படையில் காலம் காலமாக தரகர்களிடம் இருந்து காப்பாற்றி விவசாயிகளின் விளைபொருளுக்கு நியாயமான விலை கிடைப்பதை மாநில அரசுதான் பூர்த்தி செய்து வருகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலில் இருக்கும் பொருள் 14-ல் இருக்கும் வேளாண்மை தொடர்பான சட்டங்களை நிறைவேற்றும் முழு அதிகாரமும் மாநில அரசுக்கே இருக்கிறது. அதேபோல நிலம், நிலம் சார்ந்த சுவாதின உடன்படிக்கை ஆகியவை மாநிலப் பட்டியலில் இருக்கிறது.
இவை தவிர மாநிலத்தில் உள்ள அதிகாரங்களான 46, 47, 48 ஆகியவற்றை ஒட்டு மொத்தமாகவும், ஒன்றோடொன்றும் இணைத்துப் பார்த்தால் வேளாண்மையைப் பொருத்தமட்டில் சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்கே இருக்கிறது. ஆகவே இந்த அதிகாரத்திற்குள் நுழைந்து மத்திய அரசு சட்டம் இயற்றி இருப்பதை நாம் வெறுமனே வேடிக்கை பார்க்கவும் முடியாது, ஏற்றுக்கொள்ளவும் இயலாது.
அரசியலமைப்புச் சட்டம் தந்துள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் சாரங்களை மனதில் கொண்டுதான் இந்த மூன்று சட்டங்களையும் எதிர்த்து ஏற்கெனவே திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு சட்டப்பேரவையில் இந்த இரண்டு வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று திமுக சார்பில், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்துகிறேன்.
விவசாயிகளுக்கு கடுமையான நீண்டகாலப் பாதிப்பினை ஏற்படுத்தும் சட்டங்கள் குறித்து விவாதித்து உரிய தீர்மானம் நிறைவேற்றுவதற்காக உடனடியாக தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்டப் பரிந்துரை செய்யுமாறும், அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 உள்ளிட்ட மூன்று சட்டங்களுக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும்.
தமிழக வேளாண்மை மற்ற விவசாயப் பெருமக்களின் பழிச் சொல்லுக்கு ஆளாகாமல் இருக்க நடவடிக்கைகள் மிக மிக அவசரமும் அவசியமும் ஆகும் என்பதை அனைவரும் உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என இவ்வாறு இவர் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.