மத்திய தொல்லியல் படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் மொழி இணைக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் மத்திய அரசின் தொல்லியல்துறை சார்பில் பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு தொல்லியல்துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலை பட்டயப் படிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, இந்திய வரலாறு, மானுடவியல் மற்றும் சமஸ்கிருதம், பாலி, அரபு ஆகிய மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனை அடுத்து பல்வேறு தமிழ் ஆர்வலர்களும் அதனை எதிர்த்தனர். அதன் பின்னர் பல்வேறு தரப்பினரும் இதை எதிர்த்து வந்தனர். தமிழை இதில் இணைக்க வேண்டும் இது தமிழுக்கு தமிழ்நாடே சேந்தவர்களுக்கு அநீதி என கூறி வந்தனர். இந்நிலையில் தமிழ் இந்த பட்டியலில் தற்போது சேர்க்கப்பட்டது. அதுமட்டுமின்றி பல்வேறு திராவிட மொழிகள் ஆனா தெலுகு, மலையாளம், போன்ற மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மு.க ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
மத்திய தொல்லியல் துறையின் பட்டயப் படிப்பிற்கான தகுதியில் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது. கடும் கண்டனத்திற்குப் பிறகு தமிழ் இணைக்கப்பட்டிருக்கிறது. வரவேற்கிறேன். மொழிகளே, பன்முகத்தன்மையின் பண்பாட்டு அடித்தளங்கள்! இனியும் மாற்றாந்தாய் மனப்போக்கை கடைப்பிடிக்க வேண்டாம்.