சட்டமன்றத் தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியை 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் துவக்கிய கமல்ஹாசன், கடந்த மக்களவைத் தேர்தலில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலை சந்தித்தார். அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவினாலும் நகரப் பகுதிகளில் குறிப்பிட்ட சதவிகிதம் வாக்கு கமல் கட்சிக்கு கிடைத்தது. இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் கமல்ஹாசன்.
மக்களவைத் தேர்தலில் ரஜினியிடம் கமல்ஹாசன் ஆதரவு கோரியிருந்தார். பாஜகவின் தேர்தல் அறிக்கையை மட்டும் வரவேற்ற ரஜினி, யாருக்கும் தனது ஆதரவு இல்லை என்று கூறி கமலின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். சட்டமன்றத் தேர்தல் ஆரம்பிக்கும் நிலையில், ரஜினியுடன் ஈகோ பார்க்காமல் இணைந்து பணியாற்றத் தயார் என கமல்ஹாசன் அறிவித்தார். ஆனால், ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை என்று அறிவித்ததால் அவருடைய வாக்கு யாருக்கு என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கமல்ஹாசன், ரஜினி அரசியலுக்கு வந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்பதுதான் என் கருத்தும். ஆனால், அவரின் உடல்நலம் முக்கியம். அவரை சந்தித்துவிட்டு பேசுகிறேன் என்றார்.
ரஜினியிடம் ஆதரவு கேட்பீர்களா என்று கேட்க, “தேர்தல் என்பதால் அனைவரிடமும் ஆதரவு கேட்பேன். அப்படி இருக்கும் போது, என் நண்பரிடத்தில் கேட்காமல் இருப்பேனா? நான் நேற்று சொன்னது போல் அவரின் ஆரோக்கியம் முக்கியம். அவருக்கு ரசிகர் பட்டாளாம் உருவாகும் முன்பே என் ரஜினி எனக் கூறியவன் நான்” என்று பதிலளித்தார் கமல்ஹாசன்.
read more: அதிமுகவை உடைக்கப் பார்க்கிறார் மு.க.ஸ்டாலின்: முதல்வர் பகிரங்க குற்றச்சாட்டு!
முதல்வர் வேட்பாளர் நான் தான் என எனது கட்சியினர் ஏற்கனவே அறிவித்துவிட்டனர். கட்சியின் ஆசை தான் என் ஆசை. அப்படித்தானே ஒரு கட்சியின் தலைவர் இருக்க முடியும் என்றவர், “இங்குள்ள அனைவருமே திராவிடர்கள் தான். அது இரண்டு கட்சிக்கு மட்டுமே சொந்தம் அல்ல. ஆன்மீகத்திற்கும் எனக்கும் விரோதம் கிடையாது. என்னை யாரும் ஆன்மீகத்தை ஏற்றுக்கொள்ளும்படி நிர்பந்திக்க முடியாது. அதேபோல பகுத்தறிவை ஏற்றுக்கொள்ளும்படி நான் யாரையும் நிர்பந்திக்க முடியாது என்று பேட்டியளித்தார்.