மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்குவதற்கு ரஜினிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மக்கள் சேவைக் கட்சி என்ற பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாகவும், அதற்கு ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் ரஜினிகாந்த் துவங்கவுள்ள கட்சியின் பெயர் மக்கள் சேவை கட்சி என்று வைக்க கூடாதென அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரியலூரில் அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் மாநிலத் தலைவர் தங்க.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “புதிதாக கட்சி துவங்கவுள்ள ரஜினிகாந்த் மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய கூடாது. அப்படி பதிவு செய்தால் மக்கள் சேவை இயக்கத்திற்கும் மக்கள் சேவை கட்சிக்கும் பொதுமக்களிடையே குழப்பத்தை விளைவிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி செய்தால் கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் நலன் கருதி நம்மாழ்வார் கொள்கை வழியில் இயங்கி வரும் மக்கள் சேவை இயக்கத்தின் செயல்பாடுகளுக்கும் சேவைகளுக்கும் களங்கம் விளைவிக்கும் என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் சேவை கட்சி என்று பதிவு செய்வது மக்கள் சேவை இயக்கத்தினருக்கு இயக்கத்தின் செயல்பாடுகள் மனதளவில் பாதிப்பை உண்டாக்கி வருகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கொள்கைகளுக்கும் விதிகளுக்கும் முரணாக இம்முறையில் மற்றொரு இயக்கத்தினரின் புகழ் மற்றும் உரிமையை மற்றவர்கள் பறித்துச் செல்வதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
read more: எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கமாட்டோமா? பாஜக விளக்கம்!
ரஜினிகாந்த் அவர்களுக்கு மக்கள் சேவை இயக்கத்தின் சார்பில் வைக்கக் கூடிய கோரிக்கை மக்கள் சேவை கட்சி அல்லது மக்கள் சேவை இயக்கம் என்ற பெயரில் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டாம். மேலும் ரஜினிகாந்த் அவர்கள் மக்கள் சேவை கட்சி அல்லது இயக்கம் என்றில்லாமல் வேறு பெயரில் கட்சி துவங்குவதை வரவேற்கிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் சேவை இயக்கத்தின் கோரிக்கையை ஏற்காமல் மக்கள் சேவை கட்சி என்று பதிவு செய்தால் உரிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படுவது எனவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து அன்று இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் மூலமாக ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.