ஈரோடு மாவட்டம் சோலாரில் நடைபெற்ற நிகழ்வில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு இரண்டாயிரத்து 100.37 கோடிக்கான வங்கிக்கடன் இணைப்புகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 6.16 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டினார். பின்னர் பேசிய அவர், ஈரோட்டிற்கு வரும் போதெல்லாம் என் தாய்வீட்டிற்கு வருகின்ற உணர்வை அடைகின்றேன். அதுமட்டுமில்லை, திமுகவின் தொட்டில் என்று சொல்லப்படுகின்ற ஈரோட்டில் பிறந்த பகுத்தறிவு பகவலவன் பெரியார் அவர்களும் மற்றொரு காரணம் எனக் குறிப்பிட்டார். 2014 முதல் ஒன்றிய அரசிற்கு தமிழ்நாட்டின் மூலம் வரியாக 6 லட்சம் கோடி வழங்கியுள்ளது. ஆனால் ஒன்றிய அரசோ 2.50 லட்சம் கோடி தான் திரும்பி வழங்கி இருப்பதாக குற்றம் சாட்டினார்.
தனது வீட்டிலும், முதலமைச்சர் வீட்டிலும் மகளிர் சுய உதவிக்குழுவின் பொருட்களை பயன்படுத்துவதாக குறிப்பிட்ட உதயநிதி, பரிசுப் பொருட்களை வழங்கும் போதும் மகளிர் சுய உதவிக்குழுவின் பொருட்களையே வழங்கமாறு கேட்டுக் கொண்டார். இங்கு வழங்கப்பட்ட தொகை கடன் அல்ல, உங்கள் மீது முதலமைச்சர் உங்கள் மீது வைத்த நம்பிக்கை எனத் தெரிவித்தார். இந்திய அளவில் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாகக் கூறி மும்பையில் விருது வழங்க உள்ளனர் என பெருமை பொங்க குறிப்பிட்டார்.